செவ்வாய், 29 அக்டோபர், 2013

உறவு பசித்த நேரம்

வானத்தில் மேகக்கூட்டம் ஓடுவதை போல அந்த நகரத்தில் எல்லாரும் ஓடிக்கொண்டிருந்தனர். சிலர் காலாலும் சிலர் வாகனத்திலும். மெயின் ரோட்டில் இருந்து சற்று விலகி இருந்தது அந்த தெரு. உடலில் காய்ச்சல் வந்தால் எப்படி உடம்பு முழுக்க சூடாகுமோ, அதே போல நகரத்தின் பரபரப்பு அந்த தெருவிலும் இருந்தது. அறுபதுகளில் கட்டிய வீடுகள். காம்பவுண்ட்  சுவர் வைத்து தோட்டத்திற்கு இடம் விட்டு கட்டிய வீடுகள் இன்றைக்கு அரசு அலுவலங்கலாக காட்சி அளித்துகொண்டிருதது. அந்த தபால் நிலையத்தின் முன் வாசல் தட்டி வைத்து அடைக்கப்பட்டிருந்தது. பக்க ஜன்னல்களில் மணி ஆர்டர் செய்வதிர்ற்கு, தபால் கவர் வாங்குவதற்கும் மனிதர்கள் வரிசையில் நின்றிருந்தனர். தெருவில் சிலர் தங்களது வாகனத்தை நிறுத்த இடம் தேடிக்கொண்டு இருந்தனர். கிடைத்த இடங்களில் எல்லாம் இரு சக்கர வாகனங்கள் நிரம்பிருந்தன.

பிரசாத் அங்கே கிடைத்த சிறு இடைவெளியில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அருகிலிருக்கும் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்றான். அன்று மாதக்கடைசி. அப்பாவிற்கு சம்பளம் அக்கௌன்டில் வரவு வைக்க பட்டிருக்கும். சீக்கிரம் எடுத்து போய் அவரிடம் குடுத்து, சில வீட்டு செலவுகளையும் முடிக்க வேண்டும்.

பிரசாத் ஒரு முதுகலை பட்டதாரி. ஆராய்ச்சியில் ஆர்வம் இருந்ததால் பிஹச்டி செய்வதற்காக பல நாட்டில் பல இடங்களில் அப்ளை செய்துவிட்டு முடிவிற்காக காத்து கொண்டிருப்பவன். அப்பா அம்மா இருக்கும் வீடு சற்று கிராம புறத்தில் இருந்ததினால், இவனுக்கும் தொடர் மின்சாரம் மற்றும் இனையதள சேவை தேவை என்பதால் அந்த நகரத்தில் தனது சித்தி வீட்டில் தங்கி இருந்தான். வேலை இல்லாமல் வீட்டில் இருப்பவனை விட வேலைக்கு அப்ளை செய்து விட்டு முடிவிற்காக காத்து கொண்டிருப்பவனின் நிலைமை பயங்கர கொடியது. வேலைக்காரனை சில வேலைகள் சொன்னால் டிப்ஸ் குடுக்க வேண்டி இருக்கும் என்பதால் வீட்டில் இருப்பவர்கள் பிரசாத்தை எல்லா வேலையும் செய்ய பணித்திருந்தனர்.

வீட்டில் மளிகை சாமான் வாங்குவது, போஸ்ட் ஆபிஸ் செல்வது, கரண்ட் பில் கட்டுவது, என அணைத்து வேலைகளும் அவன் மேல தான். சில நேரங்களில் சித்தி பசங்க வீட்டில் இருப்பவர்களிடம் எதாவது கேட்டால், அண்ணா சும்மா தான் இருக்கான் அவன் கிட்டே போய் கேளுன்னு சொல்லி விடுவார்கள். பிரசாத் சிரித்து கொண்டு பசங்களுக்கு தேவையானதை செய்து குடுப்பான்.

பிரசாத்தின் தற்பொழுது பொழுதுபோக்கு பாட்டு கேட்பது. சில நேரங்களில் அடக்க முடியாத கோவம் வரும்போது, ஹெட் செட்டை காதில் மாட்டிக்கொண்டு தனது இருசக்கர வானகத்தில் எங்கயாவது சென்று விட்டு திரும்புவான். காதில் பாட்டுக்களின் ரீங்காரம், வேகமாக வலது புறம் வரும் வாகனங்கள், எதோ பூச்சாண்டி வருவது போல இருப்பக்கமும் பார்க்காமல் ரோட்டை கடக்கும் மக்கள், சிக்னல்கள் அனைத்தையும் தாண்டிய பின் தூரத்தில் ஒரு ஹோட்டல், அங்கே சென்று ஒரு ப்ளேட் பனீர் 65 சாப்பிட்டு திரும்பும் போது அனைத்து கோவமும் கரைந்திருக்கும். அன்றும் தனது இருசக்கர வாகனத்தில் அப்படி வந்து நிறுத்தி வரிசையில் நின்று கொண்டிருந்தான்.


“ச்சே அதுக்கு புரியவே மாட்டேங்குது, சரியான தொல்லையா போச்சு, வீட்ட விட்டு தொலஞ்சு போனா என்ன? என்ன மயித்துக்கு இங்க வந்து உக்காந்துகிட்டு என்னோட தாலி அறுக்குது...” சற்று உரக்க தனது அம்மா காது படவே கத்தினான் அவன்.
“கத்தாதீங்க, அத்தைக்கு கேட்ற போகுது”
“நல்லா கேக்கட்டுமே, இன்னும் ரெண்டு பேரு இருக்காங்கல்ல அண்ணன் தம்பிங்க, அவங்க வீட்டுக்கு போக வேண்டியது தானே, நான் தானா கிடைச்சேன்”
“மருந்து செலவுன்னு என்னோட பாதி சம்பளம் அதுக்கே செலவளிக்கிறேன்”
“ஏங்க இப்பிடி கத்தாதீங்க.. அத்தை எங்கயாவது போய்ட போறாங்க”
“போகட்டும் போடி...”
தினமும் இதே வார்த்தைகள் தான். மூணு பிள்ளைங்க. புருஷன் செத்துப்போன பின்னாடி அவங்க வீட்டுல போய் இருக்கலாம்னு எல்லாருடைய வீட்டுக்கும் போயாச்சு. எல்லா வீட்டிலேயும் இதே வசவுகள் தான். சகித்துக்கொண்டு தான் பேரன்களோடு பேசி கொண்டிருக்கிற சுகம் மட்டும் தான் அவளுக்கு. இன்றைக்கு அளவுக்கு மீறி போய்க்கொண்டிருக்கிறது.

இரவு தூக்கமே வரவில்லை. அந்த குழி விழுந்த கண்களின் இருபுறமும் நீர் வழிந்து கொண்டிருந்தது. வானத்தின் உள்ள நட்சத்திரங்கள் சிறு குழந்தையுடன் ஒளிந்து கொண்டு விளையாடுவது போல அவ்வப்போது மேகத்தின் உள்ளே சென்று வந்தது. சிமெண்ட் திண்ணை, வலது புறம் வீட்டின் சுவர், இடது புறம் சிறு தோட்டம், புடவையை மடித்து தலையணை,  சிறு சிறு பூச்சிகளும் வண்டுகளும் தான் தற்பொழுது நண்பர்கள் அவளுக்கு. அந்த வார்த்தைகள் மறுபடியும் மறுபடியும் காதினுள் ஒலித்துகொண்டே தான் இருந்தது.

சூரியன் தனது செங்கரங்களை விரித்து கொண்டிருந்தான். பறவைகளின் சப்தங்கள், தூரத்தில் நாய் குலைக்கும் சப்தம், இதை எல்லாம் கேட்டுக்கொண்டு மனதில் ஆவேசம் வந்தது போல நடந்து கொண்டிருந்தாள். நீள்வட்டமான முகம், அறுபது சதவிகிதம் நரைத்த முடி, கண்களின் பக்கம் மட்டும் உள்ள சுருக்கம், இடது கன்னத்தில் கண்ணுக்கு கீழே ஒரு உருண்டையான மச்சம், வெள்ளை நிறத் தோல், கழுத்தில் நெறைய நாட்கள் நகைகள் அணிதிருந்ததால் உண்டான தோளின் கருமை, வெளிர் மஞ்சள் நிற புடவை, இடது கையில் கருப்பு கயறு, செருப்பு போடாத கால்கள், வேகமாக ஒன்றின் பின் ஒன்றாக எடுத்து வைத்து நடந்து கொண்டிருந்தாள்.


“சார், ஏன் சார் நடுவுல வரீங்க, நாங்க தான் லைன் ல நிக்கிரோம்ல” வரிசையின் நடுவில் செல்ல முயன்றவரை பார்த்து கத்தினான் பிரசாத்.
“சார் இல்ல சார், பாப்பா ஆஸ்பத்திரில இருக்கு சார், சீக்கிரம் போகணும் சார் ப்ளீஸ்”
“சரி போங்க சீக்கிரம் போங்க, சார் அவரு முதல்ல போகட்டும் சார், மேடம் ப்ளீஸ் கேன் யூ அல்லோ ஹிம் டு கோ பர்ஸ்ட்”
“ரொம்ப தேங்க்ஸ் சார்”

மறுபடியும் வரிசையில் அதே இடத்தில வந்து நின்றான். காதில் அதே பாட்டு. அவனை தாண்டி செல்பவர்கள் எல்லாம் தன் பின்னால் எதையோ பார்த்துகொண்டிருப்பது போன்று தோன்றியது. சட்டென்று திரும்பி பார்த்தான். அவள் எதிரே இருந்த மஞ்சள் சுவற்றின் முன்னே அமர்திருந்தாள். பழுப்பேறிய மஞ்சள் நிற புடவை. ஆடைகள் விலகி இருந்தன, அதை தான் எல்லோரும் பார்த்துகொண்டிருந்தனர். பல நாட்கள் குளிக்காததினால் தோலின் மீது கருமை நிறம் ஏறி இருந்தது. முகத்தில் சோர்வு, சுருக்கம் அதிகமாகி இருந்தது. நடந்து நடந்து கால்கள் காய்ச்சி போய் இருந்தன.


பார்த்தவுடனே பிரசாத் வேகமாகே அவள் அருகே சென்றான். ஆடைகளை சரி செய்தான். பாக்கெட்டில் வைத்திருந்த பத்து ரூபாய் எடுத்து அவளிடம் நீட்டினான். தரையையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். எந்த சலனமும் அவளிடத்தில் இல்லை. அவனை நிமிர்த்து கூட பார்கவில்லை அவள். அருகே அவன் அமர்ந்து மீண்டும் அவளிடம் பணத்தை நீட்டினான். அவளது கண்கள் சற்று இவன் பக்கம் திரும்பியது.

“இந்தாங்க மா வச்சுகுங்க”
“வேண்டாம் பா”
“பரவாலீங்க மா, வச்சுக்குங்க”
“இல்ல பா காசு வேண்டாம்”
“காசு வேண்டாம்னா வேற என்ன வேணும் மா”
“ரொம்ப பசிக்குது பா, ரெண்டு இட்லி வாங்கி தரியா” தயக்கத்தில் குரல் நடுங்கியது..

பக்கத்திலிருக்கும் மெஸ்சில் இரு இட்லிகள் வாங்கி வந்தான் அவன். பார்சலை பிரித்து சாம்பாரை இட்லி மீது ஊற்றி அவளிடம் குடுத்தான். அவளிடம் குடுத்து விட்டு அருகே இருக்கும் கல்லின் மீது அமர்ந்து கொண்டான். மிகவும் நிதானமாக இட்லியின் மீது கைவைத்தால் அவள். கண்கள் குளமாக தொடங்கி இருந்தது.

“சாப்ட்டு ரெண்டு நாள் ஆச்சு பா”
“சரிங்க பேசாம சாப்டுங்க”

இட்லிகளை சாப்பிட்டு விட்டு விரல்களை நன்றாக நாவால் சுத்தப்படுத்தினாள். நகங்களின் நடுவே மணல் கருமையாக காட்சியளித்தது. மீதி இருந்ததை புடவையின் மீது துடைத்தாள்.

“என்ன ம்மா நல்லா சாப்டீங்களா”
“சாப்டேன் பா”
“ரொம்ப நன்றி பா, எனக்கு மூணு பசங்க இருக்காங்க, நா சாப்டும்போது யாருமே வந்து என் பக்கத்துல வந்து உக்காந்ததே இல்ல...”
“எனக்குன்னு ஒரு தட்டுல சாப்பாட்ட போட்டு என் முன்னாடி வச்சுட்டு போய்டுவாங்க, ஒருவேளை தான், அதை தான் நா ரெண்டு வேளைக்கும் வச்சு சாப்டனும்”
“அவங்கள என்னத்துக்கு குத்தம் சொல்லணும், அவனவனுக்கு அவன் குடும்பம், நா பாரமாகிட்டேன்”

பிரசாத் ஒன்னும் சொல்லாமல் இருந்தான். அவன் கண்களில் கண்ணீர் அந்த நொடி வந்துவிடும் என்பது போல இருந்தது. அவனது நிலைமை அடுத்த கேள்விகளை கேட்க விடாமல் தடுத்தது.
“ரெண்டு மாசம் ஆச்சு பா, ஒரு அம்மாவுக்கு என்ன வேணும், சொத்தா கேக்குறோம், அரவணைப்புக்கு ஒரு உறவு, பசிக்கு சாப்பாடு, அவங்களால அது முடியல”
“நீங்க எங்க மா தங்கி இருக்கீங்க”
“இல்ல பா, வேண்டாம்... ரொம்ப நாளைக்கு அப்பறம் என்னோட மனசு நிறைஞ்சிருக்கு, நீ நல்லா இருக்கணும்”
வேகம்மாக சுவரை புடித்து எழுந்தால் அவள், ரெண்டு அடி எடுத்து வைத்து திரும்பினாள், கண்கள் கூர்மையாகி இருந்தன.


“இனிமே வாழ்கையிலே உன்ன பாக்கவே கூடாது ப்பா”

திரும்பி பார்க்காமல் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக