தடக்.. தடக்...
ரயிலின் ஓசை சீராக கேட்டு கொண்டிருந்தது. ஆறடி
உயரம், மெலிந்த ஆனால் வலிமையான உடல், அழுத்தமான பார்வை எல்லாம் அவனை ஒரு
பயிற்சியில் உள்ள போலீஸ்காரன் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது. சற்றே
அழுக்கேறிய இளம்பச்சை சட்டையும், பழுப்பாக ஒரு நீல ஜீன்சும் அணிந்திருந்தான்.
கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தது. கழிவறைக்கு அருகே இருக்கை இருந்ததினால் மூத்திர
வாடை, அங்கேயும் ஐந்து பேர் நின்றிருந்தனர்.
அவன் உருவத்திற்கு உட்காந்திருந்த இருக்கையில்
இரண்டு பேர் அமரலாம். அவன் தோற்றத்தை பார்த்த உடனே விலகி சென்றனர். முன்னே
கைகுழந்தையுடன் அமர்ந்திருந்த முதியவரை பார்த்து ஒரு புன்னகை செய்தார். வலது
பக்கத்தில் உள்ள இருக்கையில் வடஇந்தியர்கள். சிறிது கூட இடைவெளி இல்லாமல் பேசிக்கொண்டிருந்தனர்.
ஒருவர் பேசுவதை மற்றொருவர் கவனிப்பதாகவே தெரியவில்லை. அவர்களுக்கு நடுவே ஒரு
ரோஜாப்பூ நிறத்தில் உடையணிந்த குழந்தை, எதோ தனக்கு தெரிந்த பாஷையில் கையை ஆட்டி
தனியே பேசிக்கொண்டிருந்தது. மேலே கால்களை பார்க்கும்பொழுது பன்னிரண்டு பேர்
அமர்ந்திருப்பது போல இருந்தது.
“சுண்டல் வாங்கலையோ!! சுண்டல்.. சூடான
சுண்டல்...”
“சாம்....சா... சூடான சாம்.....சா வடேய்.....”
“வணக்கம் சின்னகருப்பன் சார்... சுண்டல்
சாப்டுங்க சார்... “
சுண்டல்காரனை பார்த்தான்.
“இல்ல சார், பொண்ணு பேர் இருந்துச்சுன்னா தான்
அம்மா பேரா பொண்டாட்டி பேரா இல்ல கொழந்தை பேரான்னு கொழப்பம் வரும். ஆம்பள பேரு
இல்ல அதான் உங்க பேரா தான் இருக்கணும்னு கூப்பிட்டேன்.”
கையை நிமிர்த்தி அதில் “சின்னகருப்பன்”னு பச்சை
குத்தியிருப்பதை பார்த்தான்.
“சரி ஐஞ்சு ரூபாய்க்கு குடு”
“சுண்டல் வாங்கலயோ சுண்டல்...”
சில்லறை தரும் இடைவெளியில் நான்கு முறை
‘கூவி’னான்.
சுண்டல் சுருட்டிய காகிதத்தின் அடிக்கூம்பை இடது
கையால் புடித்து, ஒவ்வொரு சுண்டலாக வாயில் போட ஆரம்பித்தான்.
.
.
இலந்தைபழம், கருமையாக லேகியம் போலவே இருக்கும்.
எடுத்து வாயில் வைக்கும் போது சூர்ர்ர்..ன்னு இழுக்கும். முன்னால் அது இரயில்
நிலையத்தின் அருகே உள்ள பெட்டிகடையில் தான் கிடைக்கும். ஊருக்குள் கிடைக்காது.
அதற்க்காகவே மாலை வேளையில், பள்ளி முடிந்தவுடன் சில மாணவர்கள் கூட்டமாக சேர்ந்து
இலந்தைப்பழம் சாப்பிட கிளம்புவார்கள். வாங்கி அப்படியே நிலையதிற்க்குள்ளே சென்று
வருகின்ற இரயிலுக்கு “டாட்டா” காமிக்கும் படலம். ஒருவர் திருப்பி டாட்டா
காமித்துவிட்டாலும் அன்று முழுக்க அவர்களுக்குள்ளே சண்டை வரும், யாருக்கு டாட்டா
காமித்தான் என்று.
.
அன்றும் அப்படித்தான். டாட்டா காட்டலாம்னு உள்ளே
சென்றேன். ஆனால் இரயில் நின்றுகொண்டிருந்தது. நிறைய பேர் நடைமேடையில்
நின்றிருந்தனர். இலந்தைபழத்தை சப்பிக்கொன்றே உள்ளே சென்றேன். வெள்ளையாக நீளமான
சட்டையும், நீளமான டவுசரும் அணிந்திருந்தார்கள். கிட்டத்தட்ட அனைவருமே சிகரெட்
புடித்தனர். அவர்களை வேடிக்கை பார்க்க வேகமாக ஓடினோம்.
எங்களை பார்த்ததும் ஒருத்தன் கத்தினான்
“ஹே சோட்டூ, இதர் ஆ”
என்ன சொன்னான் என்று புரியவில்லை ஆனால் சைகையை
வைத்து அருகே சென்றேன்.
“துமாரா நாம் க்யா”
“புரியல னே”, இப்பொழுது எனக்கு பாஷை புரியலன்னு
என்னோட சைகை அவனுக்கு காட்டி கொடுத்திருக்கும்.
“நாம்.. நாம்..
பே.. ரூ”
“பேரா னே, சின்னகருப்பன்”
“ஹா ஹா தும் சின்ன ஹா ஹா...”
அவன் வாயில் பெயர் நுழையவில்லை.
“துமாரா கர் கஹா”
“சத்திமா புரில னா”
“அச்சா அச்சா.. இஸ் சாஹியே க்யா?”
கையில் சூட மிட்டாய் போன்று எதோ இருந்தது. சூட
மிட்டாய் என்று நினைத்து வாயில் போட்டு விட்டேன். முதலில் நன்றாக இனிப்பாக
இருந்தது. சப்ப சப்ப என் முன்னே இருந்தவர்கள் ரெண்டு ரெண்டாக தெரிய ஆரம்பித்தனர்.
கூட வந்த நண்பர்களை கூப்பிடலாம்னு திரும்பிபார்த்தேன். அவர்கள் தூரத்தில்
இருந்தார்கள். அவர்களில் ஒருவன் எல்லாரிடமும் பேச்சு கொடுத்துக்கொண்டே அழைத்து
சென்றுவிட்டான். அப்படியே இருட்டாரம்பித்தது.
.
.
.
சிறிது சிறிதாக கண்களை திறந்தேன். உடம்பே
வலித்தது. வானத்தில் திரியும் மேகங்கள் திரண்டு கீழே இருப்பது போன்று ஒரு
வெளிச்சம். மறுபடியும் வெள்ளையாக
உருவங்கள். கண்களை கசக்கிக்கொண்டு மறுபடியும் பார்த்தேன். ஒன்றுமே புரியவில்லை.
அரைமணி நேரத்தில் டாக்டர் வந்தார்.
“தம்பீ, தம்பீ”
“ம்ம்”
“நான் பேசுறது கேக்குதா”
“ம்ம்”
“பேரு என்ன தம்பீ”
“சின்னகருப்பன்”
“வெரி குட், எந்த ஊரு”
“அது அது தெக்கால இருக்குற அந்த கூட்டு ரோட்ல
ஒரு ஆலமரம் இருக்கொம் சார் அத தாண்டினா என் ஊரு வரும் சார்”
“ஊர் பேரு தம்பீ”
“அது.. அது.. தெரில சார்”
“என்ன தம்பீ படிக்குற”
“கவர்மெண்டு பள்ளிக்கூடத்தில ரெண்டாம் வகுப்பு
படிக்கிறேண் சார்”
மேலும் சில கேள்விகள், எனக்கு பெயர்கள் எதுவுமே
நினைவில் இல்லை. ஒரு வாரம் முழுக்க யோசித்திருப்பேன். நினைவில் வரவே இல்லை. அந்த
இடமே எனக்கு புதிதாய் இருந்தது. அழுக்கேறிய மெத்தைகள், சுவர்கள், துருப்பிடித்த
கட்டில்கள். கடந்த ஆறு மாதமாக கோமாவில் இருந்திருக்கிறேன். விழுப்புரம் இரயில்
நிலையத்தில் ஒருநாள் முழுக்க கிடந்திருக்கிறேன். முதலில் தூங்கிகொண்டு
இருக்கிறேன்னு நினைத்தவர்கள், ஒரு நாள் முழுக்க இடம்மாராமல் படுத்துகிடந்தினால்,
போலீஸ் மருத்துவமனையில் சேர்த்தது, முதலில் உடைகளை பார்த்து வடக்கத்தியவன் என்று
நினைத்தவர்கள், கையில் இருக்கும் பெயரை பார்த்தவுடன் தான் தமிழ் என்று தெரிய
வந்திருக்கிறது. என்னுடைய பெயர் தவிர வேறெந்த பெயருமே ஞாபகம் இல்லை.
.
.
ஆலமரம், நன்றாக வளர்ந்து விரிந்து பார்ப்பதற்கு மயிர்
முளைத்த கிலுகிலுப்பை மாதிரியே இருக்கும். விழுதுகளை புடித்து தொங்கி
விளையாடுவோம். பிறகு பக்கத்தில் இருக்கும் ஊருணியில் தண்ணீர் குடித்து விட்டு,
நடக்க ஆரம்பிப்போம். வெளிர் பச்சை நிறத்திலிருக்கும் செடிகள், கப்பி ரோட்டில்
நடக்க ஆரம்பித்து சுமார் ஏழு பாட்டுக்கள் பாடிய பின் சிறு குன்றொன்று வரும். படி
மீது ஏறி போனால் ஒரு கோவில். சற்றே பழைய கோவில். வெளிப்புற சுவற்றில் செம்மண்ணும்
சுண்ணாம்பும் வரி வரியாக இருக்கும். அப்படியே சாமிக்கு ஒரு டாட்டா காட்டிவிட்டு
மறுபுறம் எறங்கி செல்லும் பொழுது என்னுடைய வீடு வரும். எல்லாம் ஞாபகம் இருக்கிறது
ஆனால் பெயர்...
இரயில் நின்றது. நிலையத்தின் பெயரை எட்டி
பார்த்தேன், பொன்மலை. சிக்னலுக்காக நிறுத்தி இருந்தார்கள். என்னோட ஊருக்கு
பக்கத்துல இருக்கிற ஸ்டேஷனும் இப்படிதான் இருக்கும். நடைமேடை முழுக்க மரங்கள். ஆள்
அரவமற்ற இரயில் நிலையம். ஆனா ஒரே நடைமேடை தான். கண்களை மூடினேன்.
“டேய், எந்திரிடா... சாப்டு படு”
“போமா தூக்கம் வருது... விடு”, மறுபடி படுத்து
விடுவேன்.
அம்மா விடமாட்டார்கள். சாதத்தில் புளிகுழம்பை
ஊற்றி, நன்றாக பிசஞ்சு, ஒரு உருண்டையாக உருட்டி, கையில் வைப்பார்கள். நடுவில் ஒரு
குழியிட்டு அன்று செய்த வெஞ்சனத்தை உள்ளே வைத்து மூடி விடுவார்கள். அதை அப்படியே
சிறிது சிறிதாக சாப்பிடுவேன். அவ்வளவ்வு சுவையாக இருக்கும். சாப்பிட்டு கொண்டே
இருப்பேன்.
அப்பா இல்லை. தம்பி ஒருவன். அப்பொழுது அவன்
பள்ளிக்கு செல்லும் வயதாகவில்லை. பெரிய வீடு இல்லை. சிறிய காரை வீடு தான்.
வெளிக்கதவை திறந்தால் முதலில் அடுப்படி, வலது புறம் ஒரு சிறிய வெளி, பிறகு ஒரு கதவு,
உள்ளே முத்தம், வலது புறம் இரு அறைகள், பச்சை நிற சுவர், செம்மண் நிற தரை,
கொல்லையில் சிறிதாக ஒரு தோட்டம். பள்ளி விடுமுறை நாட்களில், காலையில் தோட்டத்தில்
தான் குளிப்போம். மாலை நேரத்தில், அரளி, மல்லிகை, மனோரஞ்சித பூ வாசம் வரும். மாலை
மங்கும் நேரத்தில், இரவு வரப்போகும் நேரத்தில், இருள் வந்து வராமல் இருக்கும்
நேரத்தில், அந்த மல்லிகை பூவை அப்படியே பார்த்துக்கொண்டு பல நாள் இருந்திருக்கேன்.
இரவில் மல்லிகை மொட்டாக இருக்கும். காலையில் பார்த்தல் மலர்ந்து இருக்கும். பல
நாள் மாலை முழுவதும் அந்த மல்லிகை மொட்டு எப்படி மலருகிறது என்று பார்த்துக்கொண்டே
இருப்பேன். அப்படியே தூங்கி விடுவேன். காலையில் எழுந்து பார்த்தால் படுக்கையில்
இருப்பேன்.
.
.
“ஜெல் பென், பால் பாயிண்ட் பென் பத்து
ருப்பை...”
“ஜெல் பென், பால் பாயிண்ட் பென் பத்து
ருப்பை...”
கண்களை திறந்தேன். முன்னே கண் தெரியாத மாற்று
திறனாளி.
“சார், நில்லுங்க, எனக்கு ஒன்னு குடுங்க”
“தேங்க்ஸ் சார், எது சார், ஜெல் பென்னா சார்”
“ஆமா, ஒன்னு குடுங்க”
பேனாவை எடுத்து பைக்குள்ளே வைத்தேன். உள்ளே அது
மாதிரி பதினோரு பேனாக்கள் இருந்தன. நான் இருந்த ஆசிரமத்திற்கு செல்லும் பொழுது
அங்க தற்பொழுது இருக்கிற குழந்தைகளுக்கு கொடுத்து விடுவேன். எதோ உழைகிறவருக்கும்
மரியாதை, சகோதரர்களின் தேவைகளும் குறையும். மறுபடியும் கண்கள் மூடியது.
.
அந்த ஊசி போட்ட நர்ஸ் எனக்கு புடிக்கல, ஓடி
வந்துட்டேன்.
“னே, பசிக்குது னே.. எதாவது குடு னே..”,
“கா, பசிக்குது கா, குடுக்கா”
வர வழில எல்லாரிடமும் கேப்பேன். எவனாவது காசு
குடுப்பான், சில பேர் மிச்ச சாப்பாடு குடுப்பான். அப்படியே விழுப்புரம் இரயில்
நிலையத்திற்கு எப்படியோ வந்து விட்டேன். அங்கேயே மூன்று மாதங்கள். இரயில்ல ஏறி
பிச்சை எடுக்கிறது, நடைமேடை பெஞ்ச்ல தூங்கறது, போலீஸ் வந்தா ஓடிபோய்விட்டு,
அவர்கள் சென்ற பின் வந்து படுத்துக்கொள்வேன். ஒருநாள், தூங்கும்போது போலீஸ் புடித்து
விட்டார்கள், பக்கத்துல இருக்கிற ஆசிரமத்தில சேர்த்து விட்டார்கள். ஆசிரமத்துல சாப்பாடு
போட்டு படிக்க வைத்தார்கள். பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவுடன், ஸ்போர்ட்ஸ்
கோட்டாவில் போலீஸ் தேர்வு. கான்ஸ்டபிளாக தேர்வு செய்யப்பட்டேன்.
.
.
அன்று டுட்டி சேரும் முதல் நாள். எல்லாரும் டி. எஸ். பி. ஆபிசுக்கு சென்றோம்.
.
அன்று டுட்டி சேரும் முதல் நாள். எல்லாரும் டி. எஸ். பி. ஆபிசுக்கு சென்றோம்.
எல்லாரும் சால்யுட் அடித்தோம்.
“வெல்கம், உங்க நேம் சொல்லி இன்ட்றோ குடுங்க,
அப்படியே அப்பா அம்மா பேரு எந்த ஊருன்னும் சொல்லுங்க”
“பேரு ஐயப்பன் சார், அப்பா – சரவணன், அம்மா –
சீதா, ஊரு கடலூர்”
ஒவ்வொருவராக தன்னைப்பற்றி சொல்லிக்கொண்டு
இருந்தார்கள். என் முறை.
“பேரு சின்னகருப்பன், அப்பா – லேட்
சொக்கலிங்கம்; அம்மா பேரு – சிகப்பி”, பெயர்கள் ஆசிரமத்தில் எட்டாவது படிக்கும்
பொழுது ஞாபகம் வந்தது. ஊர் பெயர் தான் எனக்கு எவ்வளவவு யோசிச்சாலும் ஞாபகம்
வரவில்லை.
“ஊரு பெயர் சொல்லு தம்பி”
“இல்ல சார், ஊர் பேர் தெரியாது சார்”
“அப்ப எங்க படிச்ச”
“இங்க ஆசிரமத்துல சார்”
“யாரும் தேடிவர்லையா”
“இல்ல சார்”
“நீ தேடலியா”
“எனக்கு ஊர் பேரே தெரியாது சார், எங்க சார்
தேடுவேன்”
“யோவ், நீ போலீஸ்யா, நீ இப்படி சொல்லலாமாயா,
இனிமே போய் தேடு, என்ன?”
மிகவும் சுலபமாக சொல்லி விட்டார், எனக்கு
இதுநாள் வரைக்கும் தோணவே இல்ல. அன்றிலிருந்து தினமும் கம்ப்யூட்டர்ல பழைய காணமல்
போனவர்கள் பட்டியல் எல்லாமே தேடுவேன்...
.
பையன் காணவில்லை என்றவுடன், சிகப்பிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, இரவு முழுவதும் எல்லாருடைய வீட்டிற்க்கும் சென்றதேடினாள். அடுத்த நாள் பள்ளி செல்லும் பாதை முழுக்க தேடல். பிறகு சித்தப்பாவும் அவங்களும் போலீஸ்ல புகார் குடுத்து இருக்காங்க. சிகப்பி ஸ்டேஷன்குள்ளே செல்லவில்லை, சித்தப்பா தான் புகார் குடுத்து எல்லாவேலையும் செஞ்சது.
பையன் காணவில்லை என்றவுடன், சிகப்பிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, இரவு முழுவதும் எல்லாருடைய வீட்டிற்க்கும் சென்றதேடினாள். அடுத்த நாள் பள்ளி செல்லும் பாதை முழுக்க தேடல். பிறகு சித்தப்பாவும் அவங்களும் போலீஸ்ல புகார் குடுத்து இருக்காங்க. சிகப்பி ஸ்டேஷன்குள்ளே செல்லவில்லை, சித்தப்பா தான் புகார் குடுத்து எல்லாவேலையும் செஞ்சது.
வரிசையாக பெயர்கள் போய்க்கொண்டே இருந்தது.
சந்திரன், வெள்ளைச்சாமி,.. சின்னத்தம்பி, மேரி,..
“சின்னத்தம்பி!!”,
சித்தப்பா என்னை அப்படிதான் கூப்பிடுவார்கள்.
“சின்னத்தம்பி என்ன செய்றீக?”
“சித்தப்பா என்னைய சின்னதம்பின்னு கூப்டீகன்னா
என் தம்பிய எப்டி கூப்டுவீக”,
“அது அப்ப பாத்துக்கலாம் அப்பு”
“நான் போறேன்.. டர்..... டர்.....” வாயால
ஸ்கூட்டரை ஒட்டி விளையாட ஓடிவிடுவேன்.
நம்ப முடியவில்லை, இதுவாக இருக்குமோ, உள்ளங்கை
வியர்க்க ஆரம்பித்தது, நாக்கு வறண்டு மேல் தாடையோடு ஒட்டியது. கடவுளே இது என்னோடதா
இருக்கட்டும். கால்கள் நிலைகொள்ளாமல் நாற்காலியிலே ஓட ஆரம்பித்தது. ஒவ்வொரு
நொடியும் கூட்ஸ் வண்டி போல ஊர்ந்து சென்றது.
அந்த தகவல்களை எடுத்தேன்.
அப்பா பெயர் சொக்கலிங்கம்,
அம்மா பெயர் சிகப்பி,
அடையாளம் வலது கையில்
பெயர் பச்சை குத்தப்படிருக்கும்.
ஊர் பெயர்....
அங்கேதான் சென்று கொண்டிருக்கிறேன்.
இரயில் நிலையத்தில் நின்றது. கோட்டையூர் – எந்த ரயில் நிலையத்தில் தொலைந்தேனோ
அதே நிலையம். புதிதாக கட்டடம் கட்டி இருந்தார்கள். மரங்கள் எல்லாம் நன்றாக
வளர்ந்திருந்தன. பத்து பேர் இறங்கி இருப்போம். வெளியே வந்தேன், பழைய இடத்தில்
பொட்டிக்கடை இல்லை. சற்று தள்ளி போய் இலந்தைப்பழம் வாங்கினேன். அம்மாவுக்கு
புடித்த மாவுருன்டையும், ரிப்பன் பக்கோடாவும் வாங்கி வைத்திருக்கிறேன். நடத்து
போகும் பொழுது அதே ஆலமரம், இன்னும் வளர்ந்து பெரியதாகி இருந்தது. பாடிக்கொண்டே
நடந்தேன். இருபது நிமிடம் கழிந்திருக்கும். அந்த தகவல் பலகையை பார்த்தவுடன் மெலிதான ஒரு புன்னகை.
“ஒ. சிறுவயல் உங்களை அன்போடு வரவேற்கிறது”.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக