சனி, 28 டிசம்பர், 2013

ஃபாரீன் டூர்

நாள் 19.01.2336 A.D.
நேரம்: 22:36
அங்கே ஆங்கிலத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்தது.
“ப்ரெசிடென்ட் யூ ஹாவ் டு சூஸ், வீ ஹவ் டன் வாட் யூ ஆர்டர்ட் (நீங்க கண்டிப்பா முடிவு செய்யணும், உங்கள் ஆணையை தான் நாங்க செயல் படுத்துறோம்)”

“ப்ரெசிடென்ட் சார்! நீங்க தான் முடிவு செய்யணும், எல்லாமே உங்க ஆணை தான். ப்ரொடோகால் படி உங்களால் 20 சொந்தங்களை மட்டும் தான் அழைத்து வர முடியும். இதுவும் உங்களுக்கு மட்டுமே பொருந்தும். பிறர் 10 பேரை தான் அழைத்து வர முடியும்”
“எல்லாம் சரிதான் ஜெனெரல்! ஆனா என்னோட சொந்தங்கள் ரொம்ப அதிகம் பேர், நா என்ன பண்ணுறது, என்னோட சித்தி பையன் ஆதியை கூப்பிடனும்னு நா பாக்குறேன், என்னோட வைப் அவளோட ஒன்னு விட்ட சித்தப்பா பசங்கள கூட்டிட்டு வரணுமாம், அழுது புலம்பரா”
“சார் இது உங்க குடும்ப விஷயம்! நாட்டுக்கு தேவையான ஒரு நல்ல முடிவா எடுங்க சார்!”
“சரி அத நான் பாத்துக்கறேன், உங்களை ஒரு லிஸ்ட் ரெடி பண்ண சொன்னேனே ரெடி பண்ணிட்டீங்களா...”
ஜெனெரல் ஒரு மெமரி சிப்பை குடுத்தார் “இதுல இருக்கு சார் எல்லாமே”
“இதுதானே ஜெனெரல் முடிவான குடும்பங்கள்”
“ஆமாம் ப்ரெசிடென்ட், நீங்க சொன்ன மாதிரியே எல்லாவகையான அடிப்படை தேவைக்கான திறமைகளை வைத்திருப்பவர்களை கண்டுபிடித்து விட்டோம்..”
“இந்த சிப்பிற்கு வேற பிரதி எதாவது இருக்கா?”
“இல்ல சார், நீங்க பார்த்து ஓகே சொன்னீங்கன்னா உளவுத்துறை அதிகாரிகள் நாளைக்கே அவர்களிடம் “டூர்” பற்றி சொல்லி விடுவார்கள்”
“சரி நான் லிஸ்ட பாத்துட்டு மதியம் சொல்றேன்”
“ஓகே சார்!”, ஒரு சல்யுட் வைத்து விட்டு ராணுவ ஜெனரல் இடத்தை விட்டு நகர்ந்தார்.

“ராம்! உள்ள வா..” இன்டர்காமில் தனது அந்தரங்க காரியதரிசியை அழைத்தார்
“இந்த சிப்ல இருக்கற லிஸ்ட அப்படியே கம்ப்யூட்டர்ல காமி”
ராம் அந்த சிப்பை கணினியில் இணைத்தான், அந்த பட்டியல் கணினித்திரையில் தெரிய ஆரம்பித்தது.
                1.       அறிவியல் நன்றாக அறிந்த
                2.       சமையல் செய்ய
                3.       வீடு சுத்தம் செய்ய
                4.       வண்டி பழுது பார்க்க
                5.       ..
                6.       ..
100.     விவசாயம் செய்ய...

பட்டியலை பார்த்தவுடன் ஜனாதிபதி முகம் மலர்ந்தது.

“ராம், அந்த விவசாய குடும்பத்து பேரை எடுத்துவிட்டு நான் குடுக்கின்ற பெயரை சேர்த்துவிடு”
“ஓகே சார்”
“ஜெனரலை என்னை 11:00 மணிக்கு சந்திக்க சொல்லிவிடு”
“ஒகே சார்”
ஜனாதிபதி தற்பொழுது மன நிறைவோடு படுக்கை அறைக்கு சென்றார். வாய் பேசுவதை நிறுத்தியவுடன் மனம் பேச ஆரம்பித்தது.
“எல்லா நாட்டினரும் அவர்கள் நாட்டிலிருந்து “டூர்”ருக்கு இந்த 100 குடும்பங்களை அழைத்து வருகிறார்கள். நான் ஒருத்தன் மட்டும் ஒரு குடும்பத்தை அழைத்து வராமல் போனால் என்ன கெடப்போகிறது” அவர் செய்த செயலுக்கு மனம் நியாயம் கற்ப்பித்து கொண்டிருந்தது.

நாள் 20.01.2336 A.D.
நேரம்: 11:00

ஜெனெரல், நீங்க குடுத்த லிஸ்ட் பார்த்தேன். என் கைல உளவுத்துறை குடுத்த லிஸ்ட்லயும் அதே குடும்பங்கள் தான் இருக்கு. ஒரு துறைய தவிர, உளவுத்துறை அறிக்கை வேறொரு குடும்பத்தை விவசாயத்துக்கு கூட்டி வர சொல்லுது. நான் ரெண்டையுமே அலசி பார்த்ததுலே என்னோட உளவுத்துறை சொன்ன குடும்பம் சரியா இருக்குற மாதிரி இருக்கு...”
ஜெனெரல் 2 நிமிடம் யோசித்து விட்டு...
“ஒகே சார், எனக்கு இதுல சம்மதம் இல்ல, ஆனா உங்க ஆணைய மீற முடியாது”
“ஒகே! உங்க உளவுத்துறைய செய்தி அனுப்பிட சொல்லுங்க”
ஜெனெரல் புறப்பட்டு சென்றார்.


26.01.2336.

இன்று தான் “டூர்” போக வேண்டிய நாள். ஜனாதிபதி முழு ராணுவ மரியாதையுடன் அந்த கப்பலில் ஏறினார். எங்கு பார்த்தாலும் நீர். நுழையும் பொழுதே பெரிய ராணுவ டாங்கிகள் இருப்பதை பார்த்தார். பிறகு ஒவ்வொரு பிரிவையும் பார்த்துக்கொண்டே சென்றனர். ஒரு பிரிவில் சிறிது நாளைக்கு தேவையான உணவு தானியங்கள், ஒரு பிரிவில் தேவையான மருந்துகள், ஒரு பிரிவில் ஆராய்ச்சி செய்ய தேவையான உபகரணங்கள், ஒரு பிரிவில் பல வருடங்கள் மின் உற்பத்தி செய்ய தேவையான பொருட்கள், கடைசி பிரிவில் விவசாயத்துக்கு தேவையான பொருட்கள்.
உடனே ஜனாதிபதி புன்னகைத்தார்.


ஒரு வாரத்திற்கு முன்பு...
“ஹலோ ஆதி”
“சொல்லுங்க ப்ரெசிடென்ட் சார்”
“வம்பிழுக்காம விடமாட்டியே, சரி ஒரு வாரம் கழிச்சு எல்லாரும் “டூர்” போறோம், ஜனவரி 25 இங்க வந்துரு...”
“சரி”
“”டூர்” போகுற கப்பல்ல நுழையும் பொது நீ விவசாயக்குடும்பமான்னு கேப்பாங்க, ஆமான்னு சொல்லிடு”
“ஓகே, சார்”

“ப்ரெசிடென்ட் சார்... சார்”
ராணுவ உடை அணிந்த வீரன் கூப்பிட்டு கொண்டிருந்தான்.
“சார் எதாவது மிஸ்டேக்கா சார்”
“இல்ல ஜெனெரல்”
“சாரி சார், நான் லெப்டினன்ட் ஜெனரல் தான் சார்”
“இனிமே நீ தான் ஜெனெரல், ஜெனெரல் வரல்லன்னு சொல்லிட்டாரு”.
அந்த ராணுவ வீரனின் முகம் குழப்பத்திற்க்கான அறிகுறிகளை வெளியிட்டது.


ஜனாதிபதி தனது அறைக்கு சென்றார்.
“ராம், எல்லாரும் வந்தாச்சா”
“வந்தாச்சு சார், உங்களுக்கு தான் வேய்டிங்”
“இன்னும் பைவ்  மினிட்ஸ்ல இருப்பேன்”
மாநாடு தொடங்கியது, எல்லா நாட்டு ஜனாதிபதிகளும் வந்திருந்தனர். அவர்களுன் சேர்ந்து சில முக்கியமான மனிதர்களும் (அமைச்சர்கள், அவர்கள் நாட்டின் பணக்காரர்கள்) வந்திருந்தனர்.
இத்திட்டத்தின் ஏற்பாட்டாளர் என்ற முறையில் ஜனாதிபதி பேசுமாறு அழைப்பட்டார்.
“மதிப்பிற்குரிய ஜனாதிபதிகளே, நண்பர்களே, இந்த நாள் மனித சமுதாயத்தில் மிக முக்கியமான நாள், பல லட்சம் வருடங்கள் இந்த பூமியில் சகல இடையூறுகளையும் தாண்டி இன்னும் மனித குலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சகல அறிவியல்களையும் நாம் தேர்ந்தவர்களாகி விட்டோம். ஜனவரி 30, இந்த புவி அழிந்துவிடும். காற்றில் மின்காந்த சக்திகள் அதிகமாகி பூமியின் உள்ளே இருக்கும் அணுக்கதிர்கள் வெளிப்பட்டு எல்லாரும் அழிந்து விடுவார்கள். நாம் மனிதர்கள், எக்காரணம் கொண்டும் மனித இனம் அழியக்கூடாது. இதற்காக தான் உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களை வைத்து செய்யப்பட்டது இந்த விண்கலம். புவியில் உள்ள அனைத்து எரிபொருளையும் இந்த பிரம்மாண்ட கப்பலுக்கு உபயோகப்படுத்தி இருக்கிறோம். எல்லோரையும் அழைத்து செல்ல முடியாது என்பதால் தான் கப்பலை கடலுக்குள் மறைத்து வைத்திருந்தோம். அதுவும் ஒரு வழிப்பயணம் மட்டும் தான் மேற்கொள்ள முடியும். இன்று கிளம்பி இன்னும் ஒரு மாதத்தில் செவ்வாய் கிரகத்தை அடைத்து விடுவோம். பிறகு அங்கே மனித குலம் தழைக்கட்டும். அதற்காகத்தான் ஒவ்வொரு துறையிலும் தேர்ச்சி பெற்றவர்களை நம் ஒவ்வொரு நாட்டிலேயிருந்து தேர்ந்தெடுத்து செவ்வாய் கிரகத்திற்கு அழைத்து செல்கிறோம். பூமியின் அணைத்து தொடர்புகளையும் துண்டித்து விட்டோம், அவர்கள் அழுகுரல் நாம் கேட்க வேண்டாம். என்றாவது ஒரு நாள் மீண்டும் இந்த புவிக்கு திரும்புவோம் என்ற ஏக்கத்தோடு கிளம்புகிறோம். வாழ்க மனித குலம்”.
கைதட்டல் தொடர்ந்தது, அனைவரும் ஜனாதிபதிக்கு கை குடுத்தனர்

பெரிய தீவு போன்று கடலில் இருந்து கிளம்பியது அந்த விண்கலம். 

விண்கலம் கிளம்பிய மூன்றாவது நாள் ஆதி வந்தான்.
“வா ஆதி! உள்ள வந்துட்டியா...”
“ரொம்ப சிம்பிள் னா, வந்துட்டேன்”
“சரி இனிமே உன் பேர் ஆதி இல்ல, முகுந்த், இந்தா ஐடி, பழைய ஐடிய எரிச்சுடு”
“சரி னா”
“இறங்கும்போது கண்டிப்பா கண்டுக்க மாட்டாங்க, விவசாயின்னு  கூப்பிட்ட ஒடனே போய்டாத, இனிமே நீ ஒரு க்ராஃபோலஜிஸ்ட்”
“ஓகே னா”.


ஒரு மாதம் கழிந்தது. பிப்ரவரி 28, செவ்வாய் கிரகத்தை அடைந்ததாக ஜெனரல் அறிவித்தார். முதல் அடியை ஜனாதிபதி தான் எடுத்துவைக்க வேண்டும் என எல்லா நாட்டு தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர். ஜனாதிபதி நெகிழ்ந்து கண்களில் நீர் குளமாகியது. விண்கலம் நெருப்பை கக்கிக்கொண்டே தரை இறங்கியது. மெதுவாக ஒரு சரிவுப்பாதை இறங்கியது. உள்ளே இருந்து வாழ்த்து கோஷங்கள் கிளம்பியது. பெருமையுடன் பாரம்பரிய உடையுடன் ஜனாதிபதி இறங்கினார்.
இந்த வேற்று மண் இன்னும் சில வருடங்களில் நம் பூமி போல் பச்சை பசேல் என்று மாற வேண்டும் என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே முதல் அடி வைத்தார்.
அனைத்து ராணுவ தளவாடங்களும் இறக்கப்பட்டன, ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர். குழந்தைகள் ஓடிவிளையாட துவங்கினர். தற்காலிகமாக வீடு கட்டும் தளவாடங்கள், தற்காலிக சோதனை கூடங்கள் எல்லாமே உடனடியாக உருவாகிற்று.

அந்த நாளை ஒரு விழாவாக கொண்டாட ஆரம்பித்தனர். ஜனாதிபதி அந்த சரிவுப்பதையின் மீது ஏறினார். எல்லா இயந்திரங்களும், தளவாடங்களும், உபகரணங்களும் இறக்கப்பட்டன. எல்லோரும் அவர்கள் துறைக்கான இயந்திரங்களுடன் சேர்ந்து நிற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஜனாதிபதியின் கண்கள் அப்படியே எல்லா திசைகளிலும் பார்த்துக்கொண்டே வந்தது.
ஒரு இடத்தில் அப்படியே கண்கள் நிலைகுத்தி நின்றது, உடனே அணைத்து தலைவர்களையும் பார்த்தார் ஜனாதிபதி. எல்லார் கண்களும் அங்கேதான் பார்த்துகொண்டிருந்தது.

//அங்கே வெறும் விவசாய இயந்திரங்கள் மட்டும் தனியே நின்றுகொண்டிருந்தது//

வெள்ளி, 13 டிசம்பர், 2013

மருத்துவத்தில் உயிரி தொழில்நுட்பவியல் - 1 (Medical Biotechnology - 1)

மருத்துவத்தில் உயிரி தொழில்நுட்பவியல் – இதில் இரண்டு வகை உண்டு. மெடிக்கல் பயொடேக்னாலஜி மற்றும் ஃபார்மாசுடிகல் பயொடேக்னாலஜி. மேலோட்டமாக பார்த்தல் இரண்டுக்குமே வித்தியாசம் கம்மி. இரண்டுமே ஒரு வியாதிக்கு மருந்து கண்டுபிடிப்பதற்க்காக செயல்படுகிறது. ஆனால் செயல்பாட்டளவில் இரண்டுமே வேறு. மெடிக்கல் பயொடேக்னாலஜியை எடுத்துக்கொண்டால் ஒரு வியாதி எப்படி வருகிறது? எந்தெந்த இடத்தில் அதற்கான தீர்வுகளை காணலாம் என்று ஆராய்ச்சி செய்து கடைசியில் மருந்து கண்டுபிடிப்பது. ஃபார்மாசுடிகல் பயொடேக்னாலஜியில் முதலில் மருந்தை தேர்வு செய்துவிட்டு பிறகு அதற்கான செயல்பாடுகளை ஆராய்வார்கள். மெடிக்கல் பயொடேக்னாலஜி பின்பற்றுகிறவர்களுக்கு செல் பயாலஜி மற்றும் மாலிகுலர் (மூலக்கூறு) பயாலஜி பற்றி நன்றாக தெரிந்திருக்கும். ஆனால் ஃபார்மாசுடிகல் பயொடேக்னாலஜி பின்பற்றுகிறவர்களுக்கு இம்யுனாலஜி (நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய துறை) சிந்தடிக் கெமிஸ்ட்ரி நன்றாக தெரிந்திருக்கும். இதுவும் சில காலம் முன்பு வரை தான். தற்பொழுது இரண்டுமே கிட்டதட்ட ஒன்றாகி விட்டது. இணையத்தில் அள்ள அள்ள குறையாத தகவல்கள் கிடைக்கின்றன, அதிலும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு மிகவும் சுலபமாக புரிவதற்கு மிக எளிய மொழிகளில் நோட்ஸ் குடுத்துக்கொண்டிருக்கிரார்கள், இதை படித்தால் கொஞ்சம் பயொடேக்னாலஜி தெரிந்தவர்களுக்கு மிகவும் சுலபமாக புரிந்துவிடும். இது போக ரிவ்யூ ஆர்டிக்கள்களை (அந்த வரையெல்லையில் உள்ள முக்கியமான ஆராய்ச்சிக்கட்டுரைகளை அலசி, அதன் சாரங்களை தொகுத்து வழங்கும் கட்டுரை) படிக்கும் பொழுது 200-300 ஆராய்ச்சிக்கட்டுரைகளை படிக்கும் சாரம் நமக்கும் கிடைத்துவிடும். இதிலிருந்து நாம் நமது ஆராய்ச்சிகளை எப்படி வித்தியாசமாக எடுத்துச்செல்லலாம் என்று நாம் தான் தீர்மானிக்க வேண்டும். அது நாம் நினைத்த பலன்களை தரலாம், தாராமலும் போகலாம். பிறகு செய்த மற்றும் படித்த தகவல்களை கொண்டு ஆராய்ச்சியை வேறுதிசையில் கொண்டு செல்லவேண்டும்.

(courtesy: www.funnytimes.com)


ஒரு வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்றால் அதற்கு மூன்று படிகள் உண்டு.

1.       முதலில் வியாதிக்கான பாத்தோலஜி தெரிந்திருக்க வேண்டும் (எப்படி ஒரு வியாதி வருகிறது, உடம்பில் எந்த இடத்தில் தாக்கி இருக்கு, இன்னும் பல).

2.       தீர்வுக்கான சாத்தியக்கூறுகள் (பழைய ஆராய்ச்சிக்கட்டுரைகளை நன்றாக படித்திருக்க வேண்டும்) (சாமர்த்தியமும் இந்த இடத்தில் அவசியம்).

3.       என்னன்ன பக்க விளைவுகள் வரக்கூடும்.

கண்டிப்பாக பல ஆராய்ச்சிகள் தோல்வியில் தான் முடியும். ஏனென்றால் எல்லாமே ட்ரயல் அண்ட் எரர் (சோதனை மற்றும் பிழைகள்) முறை தான். அந்த தோல்வியான ஆராய்ச்சியின் மூலமாக கிடைத்த தகவல்களை நாம் எடுத்துக்கொண்டு பிறகு விட்ட இடத்திலிருந்து தொடங்க வேண்டும்.



சரி இப்பொழுது மாரடைப்பை எடுத்துக்கொள்வோம். மூன்று படிகளின் படி


(courtesy: www.foxnews.com)

1.       எப்படி வருகிறது? நாம் அதிகமாக மனவுளைச்சலில் இருக்கும் பொழுதோ அல்லது அதிகமான கொலஸ்ட்ரால் உணவுகளை சாப்பிடும் பொழுதோ இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இதனால் இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் படிகிறது, பிறகு இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, இது இரத்தத்தை நாளங்களிலே உறைய வைக்கிறது, உறையும் இரத்தம் இருதயத்திற்கு செல்லும் நாளங்களில் இருந்தால் இருதயத்தின்  செயல்பாடு படிப்படியாக குறைந்து நின்றுவிடும்.

2.       எங்கே மற்றும் என்ன தீர்வு? நமது குறிக்கோள் தற்பொழுது இருதயத்திற்கு செல்லும் வழியில் உள்ள அடைப்பை எடுத்துவிட்டால் மறுபடியும் இருதயம் சாதரணமாக செயல்படக்கூடும். அந்த அடைப்பு எதனால் ஆனது? புரதம். அப்படி என்றால் புரதங்களை கரைக்கும் நொதிகளை பயன்படுத்த முடியுமா என்று ஆராய்ச்சி செய்யலாம்.

3.       பக்கவிளைவுகள் – இருக்கிறது, தண்ணீர் குறைவாக இருக்கும் பொழுது மழை வந்தால் பயிர்கள் எப்படி அழுக தொடங்குமோ அதேபோல சிறிது நேரமே இரத்தம் செல்லாத இடத்திலயும் உடனே அடைப்பை பொத்துக்கொண்டு இரத்தம் பாயும் பொழுது அந்த பாதிக்கப்பட்ட நாளங்ளினால் தாங்க முடியாது, இருதயத்தின் செயல்பாடு இன்னும் மோசாமாக போககூடும், செயல்படாமலே போககூட கூடும்.

இந்த ஆராய்ச்சிகள் மூலமாக இன்றைக்கு யுரோகைநேஸ் மற்றும் ஸ்ட்ரேப்டோகைநேஸ் என்ற நொதிகள் மாரடைப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றன. (ஸ்டன்ட்கள் மற்றும் பலூன் ப்ளாஸ்ட் போன்ற முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன).


மேலே உள்ள படத்தில் இருதயத்திலுள்ள நாளங்கள் கருப்பு நிறத்தில் தெரிகின்றது. (a) படத்தில் பார்த்தால் உறைந்த இரத்தினால் நாளம் பாதியிலே இரத்தத்தை எடுத்து செல்வதை நிறுத்தி விடுகிறது, (b) படத்தில் அந்த இடத்தில் உள்ள உறைந்த இரத்தத்தை த்ரோம்போலயிசிஸ் (நொதிகள்) மூலமாக அகற்றப்பட்டு இரத்தம் அந்த பாதித்த இடத்தை தாண்டி செல்வதை பார்க்கலாம், (c) பிறகு அந்த இடத்தில் ஸ்டன்ட் வைக்கப்படுகிறது.  (image courtesy : http://www.mims.com)

சரி இந்த ஆராய்ச்சி மூலமாக சில நொதிகள் கிடைத்திருகின்றன அவ்வளவ்வு தானே என்கிறீர்களா?
முதலில் இந்த ஆராய்ச்சிகளினால் கிடைத்த தகவல்களை பார்ப்போம்.

1.       மாரடைப்பிற்கு காரணம் கெட்ட கொலஸ்ட்ரால்
2.       சாப்பிடும் பழக்கம்
3.       பருமனானவர்களுக்குதான் மாரடைப்பு வரும் என்பது தப்பான எண்ணம் - எல்லாருக்கும் வரக்கூடும்.
4.       மன அழுத்தமோ இல்லை இரத்தக்கொதிப்போ இருந்தால் மாரடைப்பு வரக்கூடும்
5.       குறைவான வலி மற்றும் நேரம் சேமிக்கும் சிகிச்சைகள்
6.       குறைந்த செலவில் சிகிச்சை.

இது எல்லாம் ஒரு சில ஆராய்ச்சிகூடங்கள் பல வருடங்களாக ஆராய்சிகளை நடத்தி கண்டுபிடித்தவை. இன்னும் பல நடந்துகொண்டே இருக்கிறது. வெவ்வேறு வியாதிகளுக்கும் நடந்துகொண்டிருக்கிறது.
இந்த தகவல்கள் நமது முன்னோர்களுக்கும் தெரிந்திருக்க கூடும். 

தயிர் – இது மாரடைப்பை தடுப்பதற்க்கான அருமையான உணவு. தயிரிலுள்ள லக்டோபேசில்லஸ் எனப்படும் நுண்ணுயிர்கள் உணவிலுள்ள பல அசுத்தமான கெமிக்கல்களை அகற்றுவதுடன் நல்ல கொழுப்பையே தருகிறது. கெட்ட கொலஸ்ட்ரால்களை கூட அகற்றி விடுகிறது. இதனால் தான் நமது உணவில் தயிரை கடைசியாக சாப்பிடுவோம். இதுபோக நாம் உடற்பயிற்சி செய்வதும் அவசியம் தினமும் குறைந்தபட்சம் 3 கி.மீ. நடக்க வேண்டும். ஏன்னா சும்மா இருந்தோம்னா நல்ல கொழுப்பு கூட கெட்ட கொழுப்பா மாறிடும்கோ.

சனி, 16 நவம்பர், 2013

பயொடேக்னாலஜி - ஓர் அறிமுகம்


பயொடேக்னாலஜிக்கான வரையெல்லை சமீபத்தில் விரிவடைய தொடங்கி உள்ளது. மருந்து கண்டுபிடிப்பிற்கும் சில உயிரி பொருட்களை பெருமளவில் தயாரிப்பதில் மட்டும் தான் பயொடேக்னாலஜி பயன்படும் என்று முன்னர் கருதப்பட்டது. ஆனால் பயொடேக்னாலஜி தொழில்நுட்பம் தற்பொழுது எல்லா துறைகளையும் ஆக்ரமிக்க ஆரம்பித்துள்ளது. பல துறைகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பயொடேக்னாலஜியை பயன்படுத்ததொடங்கி உள்ளனர். இன்டஸ்ட்ரியல் (தொழில்சார்), பிளான்ட் (தாவர), மெடிக்கல் மற்றும் ஃபார்ம்மாசுடிகல் (மருத்துவ), மரைன் (கடல்சார்), என்விரோன்மெண்டல் (சுற்றுசூழல்), பயோஇன்போர்மடிக்ஸ் (கணினியில் உயிரி தொழில்நுட்பவியல்), இவை அனைத்தும் பயொடேக்னாலாஜியின் உட்பிரிவிகள். ஆனால் ஒவ்வொன்றும் எதாவது ஒரு விதத்தில் அணைத்து பிரிவுகளோடும் சம்பந்தப்பட்டிருக்கும். முன்காலத்தில் பயொடேக்னாலஜி என்பது எளிய முறையில் அதாவது வெவ்வேறு குணாதிசயம் கொண்ட செடிகளின் மகரந்த சேர்க்கை போன்றவை மூலமாக செயல்பட்டு வந்தது (அப்பொழுது பயொடேக்னாலஜி என்ற பெயர் உருவாகிருக்கவில்லை). ஆனால் டிஎன்ஏ உருவகத்தை கண்டுபிடித்த பின் தற்பொழுது ஜெனெடிக் இன்ஜினியரிங் மூலமாக டிஎன்ஏவையே மாற்றி அமைத்து தேவையான குணங்களை பெற்றுவிடலாம். உதாரணமாக செடியில் பூ சிகப்பு நிறமாக வேண்டாம், பச்சை நிறமாக வேண்டும் என்றால் அதை சுலபமாக செய்யலாம், இயற்க்கைகாக காத்திருக்க வேண்டாம்.

சற்று அடிப்படையான விஷயங்களை தற்பொழுது பார்ப்போம், இதை தெரிந்து கொண்டால் பயொடேக்னாலஜி மிகவும் சுலபம்.

Gene – ஜீன் - எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படை இது தான். சில பல டிஎன்ஏக்கள் வரிசையாக சேர்ந்து, செயல்படும் புரதத்தை உற்பத்தி செய்தால் அதன் பெயர் ஜீன் (genes – ஜீன்ஸ் – பன்மை). என்னாடா டிஎன்ஏங்கறான், புரதங்கறான் ஒண்ணுமே புர்லபாங்க்ரீன்களா... நமது உடலை எடுத்துகொள்ளுங்கள். மூளை தான் நமக்கு என்ன செயல் செய்யவேண்டும் என்று சொல்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். சரி நம் மீது கொசு உட்காரும் போது என்ன செய்வோம், அந்த கொசுவை அடிப்போம் அல்லது விரட்டிவிடுவோம். அதில் கொசு வந்து உட்காருவது சமிக்கை. அது மூளைக்கு செல்லும். பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை மூளை சொல்லும். வலது/இடது கையை வைத்து அடிக்கலாமா? எவ்வளவவு வேகத்தில் அடிப்பது எல்லாம் நொடிக்கணக்கில் கணக்கீடு செய்து கொசு அடிப்போம். அதே போல செல்லுக்கு வரக்கூடிய சிக்னலை புரிந்து கொண்டு அதற்க்கு என்ன புரதம் தேவை என்று கணக்கீடு செய்து புரதத்தை உருவாக்குவது தான் மூளை என்ற டிஎன்ஏவின் வேலை. சாப்பிட்டதை செரிப்பதர்க்கும், செரித்ததை உடலில் சேர்ப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் ஏன் மனிதன் செய்கின்ற அனைத்திற்குமே இந்த புரதங்கள் தான் அடிப்படை. இப்படி கூட சொல்லலாம். டிஎன்ஏ – தலைவன், புரதம் – அடியாள். சொன்ன வேலைய கரிக்டா செய்வாரு. இது போக, இந்த புரதங்கள் சில பல சேர்மங்களையும் உற்பத்தி செய்யும். தேவையானவற்றை உடல் எடுத்துக்கொண்டு (வைட்டமின் D), தேவையில்லாதவற்றை வெளியேற்றி விடும் (யூரியா).

சயின்சஸிலும் மூடநம்பிக்கைகள் இல்லாமல் இல்லை. 17-ம் நூற்றாண்டுக்கு முன், உயிர்கள் உயிரற்ற அல்லது வேறொரு உயிரின் மூலமாகவே சட்டென்று அந்த நொடியே உருவாக்க பட்டதாகவே நினைத்துக்கொண்டிருந்தனர். உதாரணமாக ஃப்லீ (flea) என்ற சிறு பூச்சிகள் (ப்ளேக் நோய் பரவுவதற்க்கு இதுதான் காரணம்) மண் துகள்களில் இருந்து உருவாகுவதாகவும், மாக்கோட்ஸ் என்ற புழுக்கள் (ஈயின் புழு வடிவம்), உயிரற்ற உடல்களில் இருந்து தானாகவே உருவாகுவதாகவும் சொன்னார்கள். அரிஸ்டாட்டில் முதல் பதினெட்டாம் நூற்றாண்டுகள் வரை அதுதான் நிலைமை. இதில் வான் ஹெல்மொன்ட்  (1580–1644) என்றவர் கோதுமையையும் ஒரு அழுக்கு துணியையும் 21 நாட்கள் அப்படியே வைத்திருந்தால், எலிகள் உருவாகும், செடிகளின் எடை கூடுதல் தண்ணீரை உறிஞ்சுவதால் மட்டுமே (அந்த நேரத்தில் photosynthesis கண்டுபிடிக்கப்படவில்லை) நடக்கிறது என்று கூறினார்.

File:Coldecygne.svg
பாஸ்சர் பயன்படுத்திய அன்னக்கழுத்து குடுவை
(courtesy: wikipedia)

இது அனைத்திற்கும் பதில் லூயிஸ் பாஸ்சர் (1822 – 1895) ஆய்வுகளின் மூலமாக கிடைத்தது. 1859-ல் அவர் ஆய்வு செய்த ஸ்வான் நெக் பிளாஸ்க் பரிசோதனை (அன்னக்கழுத்து குடுவை பரிசோதனை) மூலமாக தெளிவாகியது. குடுவைகளை எடுத்துகொண்டார். இரண்டிலுமே சிறு இறைச்சியை கூழ் மாதிரி அரைத்து நன்றாக தண்ணீரில் வேக வைத்தார். பிறகு அப்படியே சில காலம் வைத்திருந்தார். உள்ளே உள்ள இறைச்சி கூழ் கெடவில்லை. பிறகு குடுவையை சாய்த்து வெளியில் உள்ள கழுத்தின் ஓரத்தை உள்ளே இருக்கும் கூழ் படுமாறு செய்து அதை சில நாட்கள் வைத்திருந்தார். உள்ளே கூழ் கெட்டுபோவதை அவரால் அவதானிக்க முடிந்தது. இந்த பரிசோதனை தான் ஸ்பான்டேனியஸ் ஜெனரேஷன் (சட்டென்று உயிர் உருவாகுதல்) தத்துவத்திற்கு முடிவு கட்டியது. ஏனென்றால் முன்னே சொன்னது போல இறைச்சியில் இருந்து புழுக்கள் உருவானதென்றால் இப்பொழுதும் உருவாகி இருக்க வேண்டும், ஆனால் உருவாகவில்லை. இது மட்டும் அல்ல பாஸ்சர் பல கண்டுபிடிப்புகளை நடத்தி உள்ளார். இன்று நம் செய்யும் பால் காய்ச்சுதல் முறைக்கு பாஸ்ச்சரைசேஷன் என்று பெயர். எட்வர்ட் ஜென்னெர் (1749-1823) உருவாக்கிய வாக்சினைசேஷன் (நோய் தடுப்பு முறை) முறை மீது மேலும் பல ஆராய்ச்சிகள் செய்தார்.

மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்கள் நோய் தடுப்பு முறைகளுக்கு முன்னதாகவே இந்திய பாரம்பரியத்தில் நோய் தடுப்பு முறைகளுக்கு முக்கியத்துவம் குடுக்கப்படுள்ளது. சாணம் மொழுகுதல், மஞ்சள் கரைத்து தெளித்தல், சாம்பிராணி/தூபம் ஏற்றுதல் எல்லாமே நோய் தடுப்பு முறைதான். சாணம் ஒரு மிகச்சிறந்த கிருமிநாசினி (அதுக்காக மொசைக் தரையிலே சாணம் வச்சு மொழுக முடியாது). மஞ்சளும் அப்படிதான். மஞ்சளுக்கு கிருமிகளை அழிப்பது முதல் புற்றுநோய் அழிப்பது வரை பல நமக்கு நன்மை தரும் விளைவுகளாகவே உள்ளது. சாம்பிராணி ஏத்துதல் தான் இன்று fumigation (ஃப்யுமிகேஷன்) என்று ஆராய்ச்சி கூடங்களில் செய்யப்படுகிறது. சாம்பிராணி புகைக்கு காற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும் வல்லமை உள்ளது.

நம் பின்பற்றும் பல பழக்கங்கள் நம் முன்னோர்களால் நம் நன்மைக்கே வகுக்கப்பட்டுள்ளது. சில மூடநம்பிக்கைகளும் அதில் கலந்துள்ளது. அதற்காக இன்றைய அறிவியல் சிறுமை என்று முற்றிலும் ஒதுக்கி விடமுடியாது. அறிவியல் மூலமாக நம் முன்னோர்களால் தொகுக்கப்பட்ட பழக்கங்களுக்கு விளக்கம் பெறவேண்டும் என்பதே என்னுள்ளதிலிருக்கும் எண்ணம்.

செவ்வாய், 5 நவம்பர், 2013

BIOTECHNOLOGY - உயிரி தொழில்நுட்பவியல் - மூலமும் வரையறையும் - 1

Biotechnology – உயிரி தொழில்நுட்பவியல் – சில வருடங்களாக இது ஒரு பிரபல்யமான வார்த்தை. பள்ளிக்காலங்களில் கல்லூரியில் எந்த படிப்பு படிக்கலாம் என்று யோசிக்கும் போது முதலில் தோன்றியது C. A. (அதன் ஆளுமை என்னை ஈர்த்தது), பிறகு சில காரணங்களினால் கேட்டரிங் பக்கம் திரும்பியது (ஹோட்டல் வேண்டாம் என்று அப்பா விட்டுவிட்டு வந்ததால் அதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்), பிறகு IT, MBBS எல்லா பக்கமும் சென்றது. சரியாக தீர்மானிக்க முடியவில்லை. ஒரு முடிவில் மட்டும் தீர்மானமாக இருந்தேன். இன்ஜினியரிங் படிக்கக்கூடாது என்று. கணிதம் எனக்கு நன்றாகவே வரும், ஆனால் இன்ஜினியரிங் மீது ஆர்வம் இல்லை. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது ஒரு வாரம் அறிவியல் முகாமிற்கு சென்ற பின்னர் தான் எனக்கு இந்த பயொடேக்னாலஜி படிக்கவேண்டும் என்ற ஆசை ஆர்வமாக மாறியது. வாழ்நாள் முழுக்க படித்துக்கொண்டே இருக்ககூடிய துறைகளில் இதுவும் ஒன்று.

பயொடேக்னாலஜி என்பது “any technological application that uses biological systems, living organisms or derivatives thereof, to make or modify products or processes for specific use” என்று பொருள் படும். உயிர்களையோ, உயிர்களின் மூலமாக உருவான ஒரு பொருளையோ அல்லது ஒரு வழிமுறையோ மனிதனின் தேவைக்காக பயன்படுத்துவதை உயிரி தொழில்நுட்பவியல் என்று சொல்லப்படுகிறது. மனிதனை தவிர பிற உயிர்கள், நுண்ணுயிர்கள், தாவரங்கள், நொதிகள் என்று எதை உபயோகித்து பொருட்கள் தயாரிக்கப்பட்டாலும் அதை பயொடேக்னாலஜி என்று சொல்லலாம். எப்படி ஆங்கில மொழியின் வளர்ச்சி அதன் சக மொழிகளின் வார்த்தைகளை ஏற்பதிலும் உள்ளடைக்கியதிலும் உள்ளதோ, அதே போல் பயொடேக்னாலஜியும் பல துறைகளையும் உள்ளடைக்கி மேலும் உள்ளடக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது. பயோகெமிஸ்ட்ரி, செல் பயாலாஜி, கெமிக்கல் இன்ஜினியரிங், ஜெனிடிக்ஸ், மைக்ரோபயாலாஜி, இம்யுனலாஜி, ஜெனடிக் இன்ஜினியரிங் போல பல துறைகளின் கூட்டு உருவம் தான் பயொடேக்னாலஜி.

இதில் சில பேருக்கு குழப்பம் வரும். லைப் சயின்ஸ்சஸ் (Life Sciences) (உயிரி அறிவியல்) என்றாலும் மேலே சொன்ன அணைத்து துறைகளையும் உள்ளடைக்கியது தானே, பிறகு பயொடேக்னாலஜிக்கும் அந்த படிப்பிற்கும் என்ன வித்தியாசம் என்று. பல வருடங்களுக்கு முன்னிருந்தே மேல சொல்லப்பட்டுள்ள அனைத்து துறைகளும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இது அனைத்து துறைகளுக்கும் பொதுவான ஒரு பெயர் தான் லைப் சயின்ஸ்சஸ். இன்ஜினியரிங் என்று சொன்னால் எப்படி மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிகல் போன்ற துறைகளுக்கு பொதுவான பெயரோ, அதே போல உயிர்கள் சார்ந்த படிப்புகளுக்கு லைப் சயின்ஸ்சஸ் என்று கூறப்படுகிறது. ஆனால், மிக சமீபத்தில், அனைத்து லைப் சயின்ஸ்சஸ் துறைகளின் அடிப்படைகளை எல்லாம் கலவைகளாக்கி அதில் சிறிது கெமிக்கல் இன்ஜினியரிங் கூட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது தான் இந்த பயொடேக்னாலஜி துறை.
(நன்றி : விக்கிபீடியா)

பயொடேக்னாலஜி இந்தியர்களாகிய, இன்னும் சொல்லப்போனால் தமிழர்களாகிய நமக்கு புதிதல்ல. நாம் தினம்தோறும் வீட்டில் செய்யும் இட்லி தோசையும், தயிரும் தான் ஆதாரம். இது இரண்டுமே நுண்ணுயிர்களின் செயல்கள் தான். அரிசி உளுந்து இரண்டையும் தனியாக அரைத்து பிறகு 3 : 1 என்ற விகிதத்தில் கலந்து உப்பு சேர்த்து புளிக்க வைப்போம். ஓரிரு நாட்களில் மாவு தயார். இதில் அரிசி மற்றும் உளுந்தில் இருக்கும் மாச்சத்து நுண்ணுயிர்களினால் உடைக்கப்பட்டு சிறுசிறு சத்துக்களாக அதுவும் வேக வைத்து சாப்பிட்ட பின் நமது வயிற்றினில் சீக்கிரம் செரிக்கும் விதமாக மாற்றப்பட்டு விடும். இதில் நமது வீடுகளில் பொதுவாக ஒரு வாசகம் சொல்லப்படும். “அம்மா கைப்பக்குவம் மனைவிக்கோ வேற யாருக்கும் வராது என்று”. இதில் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நம் அனைவரின் கைகளிலும் பல விதமான நுண்ணுயிர்கள் உண்டு. ஒவ்வொருக்கும் கைகளில் உள்ள நுண்ணுயிர்கள் மாறுபடும் (நமது அன்றாட பழக்க வழக்கங்கள், நாம் வசிக்கும் சூழல் உடலில் சுரக்கின்ற பொருள்களின் கூட்டமைப்பு (வியர்வை, சீபம்), நம் உடலின் எதிர்ப்பு சக்தி போன்றவை காரணமாக). அதனால், அம்மா கலக்கும் பொழுது ஒரு வகையான நுண்ணுயிர்களும், மனைவி கலக்குவதால் வேற விதமான நுண்ணுயிர்களும் மற்றும் கரண்டி வைத்து கலக்குவதால் முற்றிலும் மாறுப்பட்ட நுண்ணுயிர்களும் மாவில் சேரும். இதனால் தான் மாவு புளிக்கும் பொழுது ஒருத்தருக்கு ஒரு மாதிரி சுவையும், வேறோருத்தருக்கு வேறு மாதிரி சுவையும் ஏற்படுகிறது. இந்த புளிக்க வைக்கும் முறைக்கு குடுத்த டெக்னிகல் பெயர் தான் ஃபெர்மண்டேஷேன் (fermentation). பால் தயிராக மாறுவதற்கு காரணமும் நுண்ணுயிர்கள் தான். தயிர் உறை ஊற்றும் பொழுது பழைய தயிரில் உள்ள நுண்ணுயிர்களை தான் பாலில் ஊற்றுகிறோம், பிறகு அது புளித்து தயிராக மாறும்.

பயொடேக்னாலஜிக்கான முக்கியத்துவம் வாட்சன் மற்றும் க்ரீக் எப்பொழுது டிஎன்ஏவின் உருவகத்தை கண்டுபிடித்தார்களோ அப்பொழுதான் தெரிய ஆரம்பித்தது (1953). அவர்கள் உருவகம் கண்டுபிடித்ததே ஒரு சுவையான (கொடுமையான) சம்பவம். கிங்க்ஸ் பல்கலைக்கழகம் லண்டனில், வாட்சன் மற்றும் க்ரீக் டிஎன்ஏவின் மூலக்கூறு உருவகத்தை கண்டுபிடிக்க மிகுந்த முயற்சி எடுத்துகொண்டிருந்தனர். அப்பொழுது பக்கத்து ஆராய்ச்சிக்கூடத்தில் மவுரிஸ் வில்கின்ஸிடம் வேலை பார்க்கும் ரோசலின் பிராங்க்ளின் என்ற பெண் ஆராய்ச்சியாளர் எக்ஸ்ரே கிறிஸ்டலோக்ராபியில் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். மவுரிஸ் வில்கின்ஸுக்கும் ரோசலின் பிராங்க்ளினுக்கும் அப்பொழுது சிறு உராய்வுகள் ஏற்பட்டன. வில்கின்ஸ் செய்ய சொன்ன வேலையை செய்யாமல் சுயமாக யோசித்து ரோசலின் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். ரோசலின் அப்பொழுது டிஎன்ஏவை மிகவும் நுட்பமாக எக்ஸ்ரே கிறிஸ்டலோக்ராபி முறையில் புகைப்படம் எடுத்துகொண்டிருந்தார். ஒரு முறை மிக நுட்பமாக டிஎன்ஏவை புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்திற்கு போட்டோ 51 (photo 51) என்று பெயர் குடுத்து வைத்திருந்தார். பிறகு வாட்சன் மற்றும் க்ரீக் ஒரு நாள் கருத்தரங்கில் அவர்களின் முடிவுகளை பற்றி பேசும்பொழுது ரோசலின் பல கேள்விகளை கேட்டார்,  அவர்கள் முடிவிர்க்கான ஆதாரங்கள் போதாது என்று வாதிட்டார்.  வில்கின்ஸிற்கு வட்சனும் க்ரீக்கும் நண்பர்கள். அதனால் ரோசலினிற்கும் வில்கின்ஸிர்க்கும் விரிசல் ஏற்ப்பட்டு வேற பல்கலைக்கழத்திற்கு மாறிவிட்டார். அவர் போகும் பொழுது வில்கின்ஸ் ரோசலினிற்க்கு தெரியாமல் அந்த புகைப்படத்தை (போட்டோ 51) எடுத்து வைத்து கொண்டுவிட்டார். பிறகு அதை கொண்டு போய் வாட்சன் மற்றும் க்ரீக்கிற்கு குடுத்து, அதன் முடிவுகளை அவர்கள் கண்டுபுடித்தாக பதிவு செய்து மூவரும் நோபெல் பரிசும் வாங்கிவிட்டார்கள் (1962). இடையில், அதிமாக எக்ஸ்ரேயில் வேலை செய்ததினால் ரோசலின் கான்சரினால் பாதிக்கப்பட்டு 1958ல் இறந்து விட்டார். இன்றைக்கு அந்த டிஎன்ஏ மூலக்கூறு உருவகத்திற்கு வாட்சன் மற்றும் க்ரீக் மாடல் என்றே பெயரிடப்பட்டுள்ளது. மிக சமீபத்தில் தான் ரோசலினிற்கும் குடுக்க வேண்டிய அங்கீகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

ரோசலின் பிராங்க்ளின் 1920 - 1958 (நன்றி : விக்கிபீடியா)

அந்த ஒரு சம்பவத்திலிருந்து தான் மாடர்ன் பயொடேக்னாலஜி (நவீன உயிரி தொழில்நுட்பவியல்) விஸ்வரூபம் எடுத்தது. எப்பொழுது டிஎன்ஏவின் மூலக்கூறு உருவகம் தெரிய வந்ததோ அன்றைய தினத்திலிருந்து மனிதன் அளப்பற்ற பல செயல்கள் செய்துவிட்டான். இன்று மனிதன் பயொடேக்னாலஜியை உபயோகப்படுத்தி தனக்கு தேவையான பண்புகளை கொண்ட நுண்ணுயிர்களை படைக்க ஆரம்பித்து விட்டான். நம் குழந்தையின் பண்புகளை நாமே தீர்மானிக்கும் அளவிற்கு கூட சீக்கிரம் வந்துவிடுவான், நன்னெறிக் கோட்பாடுகள் அவனை தடுக்காவிட்டால்.


செவ்வாய், 29 அக்டோபர், 2013

உறவு பசித்த நேரம்

வானத்தில் மேகக்கூட்டம் ஓடுவதை போல அந்த நகரத்தில் எல்லாரும் ஓடிக்கொண்டிருந்தனர். சிலர் காலாலும் சிலர் வாகனத்திலும். மெயின் ரோட்டில் இருந்து சற்று விலகி இருந்தது அந்த தெரு. உடலில் காய்ச்சல் வந்தால் எப்படி உடம்பு முழுக்க சூடாகுமோ, அதே போல நகரத்தின் பரபரப்பு அந்த தெருவிலும் இருந்தது. அறுபதுகளில் கட்டிய வீடுகள். காம்பவுண்ட்  சுவர் வைத்து தோட்டத்திற்கு இடம் விட்டு கட்டிய வீடுகள் இன்றைக்கு அரசு அலுவலங்கலாக காட்சி அளித்துகொண்டிருதது. அந்த தபால் நிலையத்தின் முன் வாசல் தட்டி வைத்து அடைக்கப்பட்டிருந்தது. பக்க ஜன்னல்களில் மணி ஆர்டர் செய்வதிர்ற்கு, தபால் கவர் வாங்குவதற்கும் மனிதர்கள் வரிசையில் நின்றிருந்தனர். தெருவில் சிலர் தங்களது வாகனத்தை நிறுத்த இடம் தேடிக்கொண்டு இருந்தனர். கிடைத்த இடங்களில் எல்லாம் இரு சக்கர வாகனங்கள் நிரம்பிருந்தன.

பிரசாத் அங்கே கிடைத்த சிறு இடைவெளியில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அருகிலிருக்கும் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்றான். அன்று மாதக்கடைசி. அப்பாவிற்கு சம்பளம் அக்கௌன்டில் வரவு வைக்க பட்டிருக்கும். சீக்கிரம் எடுத்து போய் அவரிடம் குடுத்து, சில வீட்டு செலவுகளையும் முடிக்க வேண்டும்.

பிரசாத் ஒரு முதுகலை பட்டதாரி. ஆராய்ச்சியில் ஆர்வம் இருந்ததால் பிஹச்டி செய்வதற்காக பல நாட்டில் பல இடங்களில் அப்ளை செய்துவிட்டு முடிவிற்காக காத்து கொண்டிருப்பவன். அப்பா அம்மா இருக்கும் வீடு சற்று கிராம புறத்தில் இருந்ததினால், இவனுக்கும் தொடர் மின்சாரம் மற்றும் இனையதள சேவை தேவை என்பதால் அந்த நகரத்தில் தனது சித்தி வீட்டில் தங்கி இருந்தான். வேலை இல்லாமல் வீட்டில் இருப்பவனை விட வேலைக்கு அப்ளை செய்து விட்டு முடிவிற்காக காத்து கொண்டிருப்பவனின் நிலைமை பயங்கர கொடியது. வேலைக்காரனை சில வேலைகள் சொன்னால் டிப்ஸ் குடுக்க வேண்டி இருக்கும் என்பதால் வீட்டில் இருப்பவர்கள் பிரசாத்தை எல்லா வேலையும் செய்ய பணித்திருந்தனர்.

வீட்டில் மளிகை சாமான் வாங்குவது, போஸ்ட் ஆபிஸ் செல்வது, கரண்ட் பில் கட்டுவது, என அணைத்து வேலைகளும் அவன் மேல தான். சில நேரங்களில் சித்தி பசங்க வீட்டில் இருப்பவர்களிடம் எதாவது கேட்டால், அண்ணா சும்மா தான் இருக்கான் அவன் கிட்டே போய் கேளுன்னு சொல்லி விடுவார்கள். பிரசாத் சிரித்து கொண்டு பசங்களுக்கு தேவையானதை செய்து குடுப்பான்.

பிரசாத்தின் தற்பொழுது பொழுதுபோக்கு பாட்டு கேட்பது. சில நேரங்களில் அடக்க முடியாத கோவம் வரும்போது, ஹெட் செட்டை காதில் மாட்டிக்கொண்டு தனது இருசக்கர வானகத்தில் எங்கயாவது சென்று விட்டு திரும்புவான். காதில் பாட்டுக்களின் ரீங்காரம், வேகமாக வலது புறம் வரும் வாகனங்கள், எதோ பூச்சாண்டி வருவது போல இருப்பக்கமும் பார்க்காமல் ரோட்டை கடக்கும் மக்கள், சிக்னல்கள் அனைத்தையும் தாண்டிய பின் தூரத்தில் ஒரு ஹோட்டல், அங்கே சென்று ஒரு ப்ளேட் பனீர் 65 சாப்பிட்டு திரும்பும் போது அனைத்து கோவமும் கரைந்திருக்கும். அன்றும் தனது இருசக்கர வாகனத்தில் அப்படி வந்து நிறுத்தி வரிசையில் நின்று கொண்டிருந்தான்.


“ச்சே அதுக்கு புரியவே மாட்டேங்குது, சரியான தொல்லையா போச்சு, வீட்ட விட்டு தொலஞ்சு போனா என்ன? என்ன மயித்துக்கு இங்க வந்து உக்காந்துகிட்டு என்னோட தாலி அறுக்குது...” சற்று உரக்க தனது அம்மா காது படவே கத்தினான் அவன்.
“கத்தாதீங்க, அத்தைக்கு கேட்ற போகுது”
“நல்லா கேக்கட்டுமே, இன்னும் ரெண்டு பேரு இருக்காங்கல்ல அண்ணன் தம்பிங்க, அவங்க வீட்டுக்கு போக வேண்டியது தானே, நான் தானா கிடைச்சேன்”
“மருந்து செலவுன்னு என்னோட பாதி சம்பளம் அதுக்கே செலவளிக்கிறேன்”
“ஏங்க இப்பிடி கத்தாதீங்க.. அத்தை எங்கயாவது போய்ட போறாங்க”
“போகட்டும் போடி...”
தினமும் இதே வார்த்தைகள் தான். மூணு பிள்ளைங்க. புருஷன் செத்துப்போன பின்னாடி அவங்க வீட்டுல போய் இருக்கலாம்னு எல்லாருடைய வீட்டுக்கும் போயாச்சு. எல்லா வீட்டிலேயும் இதே வசவுகள் தான். சகித்துக்கொண்டு தான் பேரன்களோடு பேசி கொண்டிருக்கிற சுகம் மட்டும் தான் அவளுக்கு. இன்றைக்கு அளவுக்கு மீறி போய்க்கொண்டிருக்கிறது.

இரவு தூக்கமே வரவில்லை. அந்த குழி விழுந்த கண்களின் இருபுறமும் நீர் வழிந்து கொண்டிருந்தது. வானத்தின் உள்ள நட்சத்திரங்கள் சிறு குழந்தையுடன் ஒளிந்து கொண்டு விளையாடுவது போல அவ்வப்போது மேகத்தின் உள்ளே சென்று வந்தது. சிமெண்ட் திண்ணை, வலது புறம் வீட்டின் சுவர், இடது புறம் சிறு தோட்டம், புடவையை மடித்து தலையணை,  சிறு சிறு பூச்சிகளும் வண்டுகளும் தான் தற்பொழுது நண்பர்கள் அவளுக்கு. அந்த வார்த்தைகள் மறுபடியும் மறுபடியும் காதினுள் ஒலித்துகொண்டே தான் இருந்தது.

சூரியன் தனது செங்கரங்களை விரித்து கொண்டிருந்தான். பறவைகளின் சப்தங்கள், தூரத்தில் நாய் குலைக்கும் சப்தம், இதை எல்லாம் கேட்டுக்கொண்டு மனதில் ஆவேசம் வந்தது போல நடந்து கொண்டிருந்தாள். நீள்வட்டமான முகம், அறுபது சதவிகிதம் நரைத்த முடி, கண்களின் பக்கம் மட்டும் உள்ள சுருக்கம், இடது கன்னத்தில் கண்ணுக்கு கீழே ஒரு உருண்டையான மச்சம், வெள்ளை நிறத் தோல், கழுத்தில் நெறைய நாட்கள் நகைகள் அணிதிருந்ததால் உண்டான தோளின் கருமை, வெளிர் மஞ்சள் நிற புடவை, இடது கையில் கருப்பு கயறு, செருப்பு போடாத கால்கள், வேகமாக ஒன்றின் பின் ஒன்றாக எடுத்து வைத்து நடந்து கொண்டிருந்தாள்.


“சார், ஏன் சார் நடுவுல வரீங்க, நாங்க தான் லைன் ல நிக்கிரோம்ல” வரிசையின் நடுவில் செல்ல முயன்றவரை பார்த்து கத்தினான் பிரசாத்.
“சார் இல்ல சார், பாப்பா ஆஸ்பத்திரில இருக்கு சார், சீக்கிரம் போகணும் சார் ப்ளீஸ்”
“சரி போங்க சீக்கிரம் போங்க, சார் அவரு முதல்ல போகட்டும் சார், மேடம் ப்ளீஸ் கேன் யூ அல்லோ ஹிம் டு கோ பர்ஸ்ட்”
“ரொம்ப தேங்க்ஸ் சார்”

மறுபடியும் வரிசையில் அதே இடத்தில வந்து நின்றான். காதில் அதே பாட்டு. அவனை தாண்டி செல்பவர்கள் எல்லாம் தன் பின்னால் எதையோ பார்த்துகொண்டிருப்பது போன்று தோன்றியது. சட்டென்று திரும்பி பார்த்தான். அவள் எதிரே இருந்த மஞ்சள் சுவற்றின் முன்னே அமர்திருந்தாள். பழுப்பேறிய மஞ்சள் நிற புடவை. ஆடைகள் விலகி இருந்தன, அதை தான் எல்லோரும் பார்த்துகொண்டிருந்தனர். பல நாட்கள் குளிக்காததினால் தோலின் மீது கருமை நிறம் ஏறி இருந்தது. முகத்தில் சோர்வு, சுருக்கம் அதிகமாகி இருந்தது. நடந்து நடந்து கால்கள் காய்ச்சி போய் இருந்தன.


பார்த்தவுடனே பிரசாத் வேகமாகே அவள் அருகே சென்றான். ஆடைகளை சரி செய்தான். பாக்கெட்டில் வைத்திருந்த பத்து ரூபாய் எடுத்து அவளிடம் நீட்டினான். தரையையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். எந்த சலனமும் அவளிடத்தில் இல்லை. அவனை நிமிர்த்து கூட பார்கவில்லை அவள். அருகே அவன் அமர்ந்து மீண்டும் அவளிடம் பணத்தை நீட்டினான். அவளது கண்கள் சற்று இவன் பக்கம் திரும்பியது.

“இந்தாங்க மா வச்சுகுங்க”
“வேண்டாம் பா”
“பரவாலீங்க மா, வச்சுக்குங்க”
“இல்ல பா காசு வேண்டாம்”
“காசு வேண்டாம்னா வேற என்ன வேணும் மா”
“ரொம்ப பசிக்குது பா, ரெண்டு இட்லி வாங்கி தரியா” தயக்கத்தில் குரல் நடுங்கியது..

பக்கத்திலிருக்கும் மெஸ்சில் இரு இட்லிகள் வாங்கி வந்தான் அவன். பார்சலை பிரித்து சாம்பாரை இட்லி மீது ஊற்றி அவளிடம் குடுத்தான். அவளிடம் குடுத்து விட்டு அருகே இருக்கும் கல்லின் மீது அமர்ந்து கொண்டான். மிகவும் நிதானமாக இட்லியின் மீது கைவைத்தால் அவள். கண்கள் குளமாக தொடங்கி இருந்தது.

“சாப்ட்டு ரெண்டு நாள் ஆச்சு பா”
“சரிங்க பேசாம சாப்டுங்க”

இட்லிகளை சாப்பிட்டு விட்டு விரல்களை நன்றாக நாவால் சுத்தப்படுத்தினாள். நகங்களின் நடுவே மணல் கருமையாக காட்சியளித்தது. மீதி இருந்ததை புடவையின் மீது துடைத்தாள்.

“என்ன ம்மா நல்லா சாப்டீங்களா”
“சாப்டேன் பா”
“ரொம்ப நன்றி பா, எனக்கு மூணு பசங்க இருக்காங்க, நா சாப்டும்போது யாருமே வந்து என் பக்கத்துல வந்து உக்காந்ததே இல்ல...”
“எனக்குன்னு ஒரு தட்டுல சாப்பாட்ட போட்டு என் முன்னாடி வச்சுட்டு போய்டுவாங்க, ஒருவேளை தான், அதை தான் நா ரெண்டு வேளைக்கும் வச்சு சாப்டனும்”
“அவங்கள என்னத்துக்கு குத்தம் சொல்லணும், அவனவனுக்கு அவன் குடும்பம், நா பாரமாகிட்டேன்”

பிரசாத் ஒன்னும் சொல்லாமல் இருந்தான். அவன் கண்களில் கண்ணீர் அந்த நொடி வந்துவிடும் என்பது போல இருந்தது. அவனது நிலைமை அடுத்த கேள்விகளை கேட்க விடாமல் தடுத்தது.
“ரெண்டு மாசம் ஆச்சு பா, ஒரு அம்மாவுக்கு என்ன வேணும், சொத்தா கேக்குறோம், அரவணைப்புக்கு ஒரு உறவு, பசிக்கு சாப்பாடு, அவங்களால அது முடியல”
“நீங்க எங்க மா தங்கி இருக்கீங்க”
“இல்ல பா, வேண்டாம்... ரொம்ப நாளைக்கு அப்பறம் என்னோட மனசு நிறைஞ்சிருக்கு, நீ நல்லா இருக்கணும்”
வேகம்மாக சுவரை புடித்து எழுந்தால் அவள், ரெண்டு அடி எடுத்து வைத்து திரும்பினாள், கண்கள் கூர்மையாகி இருந்தன.


“இனிமே வாழ்கையிலே உன்ன பாக்கவே கூடாது ப்பா”

திரும்பி பார்க்காமல் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தாள்.