சனி, 28 டிசம்பர், 2013

ஃபாரீன் டூர்

நாள் 19.01.2336 A.D.
நேரம்: 22:36
அங்கே ஆங்கிலத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்தது.
“ப்ரெசிடென்ட் யூ ஹாவ் டு சூஸ், வீ ஹவ் டன் வாட் யூ ஆர்டர்ட் (நீங்க கண்டிப்பா முடிவு செய்யணும், உங்கள் ஆணையை தான் நாங்க செயல் படுத்துறோம்)”

“ப்ரெசிடென்ட் சார்! நீங்க தான் முடிவு செய்யணும், எல்லாமே உங்க ஆணை தான். ப்ரொடோகால் படி உங்களால் 20 சொந்தங்களை மட்டும் தான் அழைத்து வர முடியும். இதுவும் உங்களுக்கு மட்டுமே பொருந்தும். பிறர் 10 பேரை தான் அழைத்து வர முடியும்”
“எல்லாம் சரிதான் ஜெனெரல்! ஆனா என்னோட சொந்தங்கள் ரொம்ப அதிகம் பேர், நா என்ன பண்ணுறது, என்னோட சித்தி பையன் ஆதியை கூப்பிடனும்னு நா பாக்குறேன், என்னோட வைப் அவளோட ஒன்னு விட்ட சித்தப்பா பசங்கள கூட்டிட்டு வரணுமாம், அழுது புலம்பரா”
“சார் இது உங்க குடும்ப விஷயம்! நாட்டுக்கு தேவையான ஒரு நல்ல முடிவா எடுங்க சார்!”
“சரி அத நான் பாத்துக்கறேன், உங்களை ஒரு லிஸ்ட் ரெடி பண்ண சொன்னேனே ரெடி பண்ணிட்டீங்களா...”
ஜெனெரல் ஒரு மெமரி சிப்பை குடுத்தார் “இதுல இருக்கு சார் எல்லாமே”
“இதுதானே ஜெனெரல் முடிவான குடும்பங்கள்”
“ஆமாம் ப்ரெசிடென்ட், நீங்க சொன்ன மாதிரியே எல்லாவகையான அடிப்படை தேவைக்கான திறமைகளை வைத்திருப்பவர்களை கண்டுபிடித்து விட்டோம்..”
“இந்த சிப்பிற்கு வேற பிரதி எதாவது இருக்கா?”
“இல்ல சார், நீங்க பார்த்து ஓகே சொன்னீங்கன்னா உளவுத்துறை அதிகாரிகள் நாளைக்கே அவர்களிடம் “டூர்” பற்றி சொல்லி விடுவார்கள்”
“சரி நான் லிஸ்ட பாத்துட்டு மதியம் சொல்றேன்”
“ஓகே சார்!”, ஒரு சல்யுட் வைத்து விட்டு ராணுவ ஜெனரல் இடத்தை விட்டு நகர்ந்தார்.

“ராம்! உள்ள வா..” இன்டர்காமில் தனது அந்தரங்க காரியதரிசியை அழைத்தார்
“இந்த சிப்ல இருக்கற லிஸ்ட அப்படியே கம்ப்யூட்டர்ல காமி”
ராம் அந்த சிப்பை கணினியில் இணைத்தான், அந்த பட்டியல் கணினித்திரையில் தெரிய ஆரம்பித்தது.
                1.       அறிவியல் நன்றாக அறிந்த
                2.       சமையல் செய்ய
                3.       வீடு சுத்தம் செய்ய
                4.       வண்டி பழுது பார்க்க
                5.       ..
                6.       ..
100.     விவசாயம் செய்ய...

பட்டியலை பார்த்தவுடன் ஜனாதிபதி முகம் மலர்ந்தது.

“ராம், அந்த விவசாய குடும்பத்து பேரை எடுத்துவிட்டு நான் குடுக்கின்ற பெயரை சேர்த்துவிடு”
“ஓகே சார்”
“ஜெனரலை என்னை 11:00 மணிக்கு சந்திக்க சொல்லிவிடு”
“ஒகே சார்”
ஜனாதிபதி தற்பொழுது மன நிறைவோடு படுக்கை அறைக்கு சென்றார். வாய் பேசுவதை நிறுத்தியவுடன் மனம் பேச ஆரம்பித்தது.
“எல்லா நாட்டினரும் அவர்கள் நாட்டிலிருந்து “டூர்”ருக்கு இந்த 100 குடும்பங்களை அழைத்து வருகிறார்கள். நான் ஒருத்தன் மட்டும் ஒரு குடும்பத்தை அழைத்து வராமல் போனால் என்ன கெடப்போகிறது” அவர் செய்த செயலுக்கு மனம் நியாயம் கற்ப்பித்து கொண்டிருந்தது.

நாள் 20.01.2336 A.D.
நேரம்: 11:00

ஜெனெரல், நீங்க குடுத்த லிஸ்ட் பார்த்தேன். என் கைல உளவுத்துறை குடுத்த லிஸ்ட்லயும் அதே குடும்பங்கள் தான் இருக்கு. ஒரு துறைய தவிர, உளவுத்துறை அறிக்கை வேறொரு குடும்பத்தை விவசாயத்துக்கு கூட்டி வர சொல்லுது. நான் ரெண்டையுமே அலசி பார்த்ததுலே என்னோட உளவுத்துறை சொன்ன குடும்பம் சரியா இருக்குற மாதிரி இருக்கு...”
ஜெனெரல் 2 நிமிடம் யோசித்து விட்டு...
“ஒகே சார், எனக்கு இதுல சம்மதம் இல்ல, ஆனா உங்க ஆணைய மீற முடியாது”
“ஒகே! உங்க உளவுத்துறைய செய்தி அனுப்பிட சொல்லுங்க”
ஜெனெரல் புறப்பட்டு சென்றார்.


26.01.2336.

இன்று தான் “டூர்” போக வேண்டிய நாள். ஜனாதிபதி முழு ராணுவ மரியாதையுடன் அந்த கப்பலில் ஏறினார். எங்கு பார்த்தாலும் நீர். நுழையும் பொழுதே பெரிய ராணுவ டாங்கிகள் இருப்பதை பார்த்தார். பிறகு ஒவ்வொரு பிரிவையும் பார்த்துக்கொண்டே சென்றனர். ஒரு பிரிவில் சிறிது நாளைக்கு தேவையான உணவு தானியங்கள், ஒரு பிரிவில் தேவையான மருந்துகள், ஒரு பிரிவில் ஆராய்ச்சி செய்ய தேவையான உபகரணங்கள், ஒரு பிரிவில் பல வருடங்கள் மின் உற்பத்தி செய்ய தேவையான பொருட்கள், கடைசி பிரிவில் விவசாயத்துக்கு தேவையான பொருட்கள்.
உடனே ஜனாதிபதி புன்னகைத்தார்.


ஒரு வாரத்திற்கு முன்பு...
“ஹலோ ஆதி”
“சொல்லுங்க ப்ரெசிடென்ட் சார்”
“வம்பிழுக்காம விடமாட்டியே, சரி ஒரு வாரம் கழிச்சு எல்லாரும் “டூர்” போறோம், ஜனவரி 25 இங்க வந்துரு...”
“சரி”
“”டூர்” போகுற கப்பல்ல நுழையும் பொது நீ விவசாயக்குடும்பமான்னு கேப்பாங்க, ஆமான்னு சொல்லிடு”
“ஓகே, சார்”

“ப்ரெசிடென்ட் சார்... சார்”
ராணுவ உடை அணிந்த வீரன் கூப்பிட்டு கொண்டிருந்தான்.
“சார் எதாவது மிஸ்டேக்கா சார்”
“இல்ல ஜெனெரல்”
“சாரி சார், நான் லெப்டினன்ட் ஜெனரல் தான் சார்”
“இனிமே நீ தான் ஜெனெரல், ஜெனெரல் வரல்லன்னு சொல்லிட்டாரு”.
அந்த ராணுவ வீரனின் முகம் குழப்பத்திற்க்கான அறிகுறிகளை வெளியிட்டது.


ஜனாதிபதி தனது அறைக்கு சென்றார்.
“ராம், எல்லாரும் வந்தாச்சா”
“வந்தாச்சு சார், உங்களுக்கு தான் வேய்டிங்”
“இன்னும் பைவ்  மினிட்ஸ்ல இருப்பேன்”
மாநாடு தொடங்கியது, எல்லா நாட்டு ஜனாதிபதிகளும் வந்திருந்தனர். அவர்களுன் சேர்ந்து சில முக்கியமான மனிதர்களும் (அமைச்சர்கள், அவர்கள் நாட்டின் பணக்காரர்கள்) வந்திருந்தனர்.
இத்திட்டத்தின் ஏற்பாட்டாளர் என்ற முறையில் ஜனாதிபதி பேசுமாறு அழைப்பட்டார்.
“மதிப்பிற்குரிய ஜனாதிபதிகளே, நண்பர்களே, இந்த நாள் மனித சமுதாயத்தில் மிக முக்கியமான நாள், பல லட்சம் வருடங்கள் இந்த பூமியில் சகல இடையூறுகளையும் தாண்டி இன்னும் மனித குலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சகல அறிவியல்களையும் நாம் தேர்ந்தவர்களாகி விட்டோம். ஜனவரி 30, இந்த புவி அழிந்துவிடும். காற்றில் மின்காந்த சக்திகள் அதிகமாகி பூமியின் உள்ளே இருக்கும் அணுக்கதிர்கள் வெளிப்பட்டு எல்லாரும் அழிந்து விடுவார்கள். நாம் மனிதர்கள், எக்காரணம் கொண்டும் மனித இனம் அழியக்கூடாது. இதற்காக தான் உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களை வைத்து செய்யப்பட்டது இந்த விண்கலம். புவியில் உள்ள அனைத்து எரிபொருளையும் இந்த பிரம்மாண்ட கப்பலுக்கு உபயோகப்படுத்தி இருக்கிறோம். எல்லோரையும் அழைத்து செல்ல முடியாது என்பதால் தான் கப்பலை கடலுக்குள் மறைத்து வைத்திருந்தோம். அதுவும் ஒரு வழிப்பயணம் மட்டும் தான் மேற்கொள்ள முடியும். இன்று கிளம்பி இன்னும் ஒரு மாதத்தில் செவ்வாய் கிரகத்தை அடைத்து விடுவோம். பிறகு அங்கே மனித குலம் தழைக்கட்டும். அதற்காகத்தான் ஒவ்வொரு துறையிலும் தேர்ச்சி பெற்றவர்களை நம் ஒவ்வொரு நாட்டிலேயிருந்து தேர்ந்தெடுத்து செவ்வாய் கிரகத்திற்கு அழைத்து செல்கிறோம். பூமியின் அணைத்து தொடர்புகளையும் துண்டித்து விட்டோம், அவர்கள் அழுகுரல் நாம் கேட்க வேண்டாம். என்றாவது ஒரு நாள் மீண்டும் இந்த புவிக்கு திரும்புவோம் என்ற ஏக்கத்தோடு கிளம்புகிறோம். வாழ்க மனித குலம்”.
கைதட்டல் தொடர்ந்தது, அனைவரும் ஜனாதிபதிக்கு கை குடுத்தனர்

பெரிய தீவு போன்று கடலில் இருந்து கிளம்பியது அந்த விண்கலம். 

விண்கலம் கிளம்பிய மூன்றாவது நாள் ஆதி வந்தான்.
“வா ஆதி! உள்ள வந்துட்டியா...”
“ரொம்ப சிம்பிள் னா, வந்துட்டேன்”
“சரி இனிமே உன் பேர் ஆதி இல்ல, முகுந்த், இந்தா ஐடி, பழைய ஐடிய எரிச்சுடு”
“சரி னா”
“இறங்கும்போது கண்டிப்பா கண்டுக்க மாட்டாங்க, விவசாயின்னு  கூப்பிட்ட ஒடனே போய்டாத, இனிமே நீ ஒரு க்ராஃபோலஜிஸ்ட்”
“ஓகே னா”.


ஒரு மாதம் கழிந்தது. பிப்ரவரி 28, செவ்வாய் கிரகத்தை அடைந்ததாக ஜெனரல் அறிவித்தார். முதல் அடியை ஜனாதிபதி தான் எடுத்துவைக்க வேண்டும் என எல்லா நாட்டு தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர். ஜனாதிபதி நெகிழ்ந்து கண்களில் நீர் குளமாகியது. விண்கலம் நெருப்பை கக்கிக்கொண்டே தரை இறங்கியது. மெதுவாக ஒரு சரிவுப்பாதை இறங்கியது. உள்ளே இருந்து வாழ்த்து கோஷங்கள் கிளம்பியது. பெருமையுடன் பாரம்பரிய உடையுடன் ஜனாதிபதி இறங்கினார்.
இந்த வேற்று மண் இன்னும் சில வருடங்களில் நம் பூமி போல் பச்சை பசேல் என்று மாற வேண்டும் என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே முதல் அடி வைத்தார்.
அனைத்து ராணுவ தளவாடங்களும் இறக்கப்பட்டன, ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர். குழந்தைகள் ஓடிவிளையாட துவங்கினர். தற்காலிகமாக வீடு கட்டும் தளவாடங்கள், தற்காலிக சோதனை கூடங்கள் எல்லாமே உடனடியாக உருவாகிற்று.

அந்த நாளை ஒரு விழாவாக கொண்டாட ஆரம்பித்தனர். ஜனாதிபதி அந்த சரிவுப்பதையின் மீது ஏறினார். எல்லா இயந்திரங்களும், தளவாடங்களும், உபகரணங்களும் இறக்கப்பட்டன. எல்லோரும் அவர்கள் துறைக்கான இயந்திரங்களுடன் சேர்ந்து நிற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஜனாதிபதியின் கண்கள் அப்படியே எல்லா திசைகளிலும் பார்த்துக்கொண்டே வந்தது.
ஒரு இடத்தில் அப்படியே கண்கள் நிலைகுத்தி நின்றது, உடனே அணைத்து தலைவர்களையும் பார்த்தார் ஜனாதிபதி. எல்லார் கண்களும் அங்கேதான் பார்த்துகொண்டிருந்தது.

//அங்கே வெறும் விவசாய இயந்திரங்கள் மட்டும் தனியே நின்றுகொண்டிருந்தது//

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக